முழு ஊரடங்கையொட்டி புதிய சேவை தொடங்கியது; சென்னையில், வீடு தேடி வரும் நடமாடும் மளிகை கடைகள் - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி


முழு ஊரடங்கையொட்டி புதிய சேவை தொடங்கியது; சென்னையில், வீடு தேடி வரும் நடமாடும் மளிகை கடைகள் - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 31 May 2021 11:23 PM GMT (Updated: 31 May 2021 11:23 PM GMT)

சென்னையில், வீடு தேடி வரும் நடமாடும் மளிகை வாகன சேவை நேற்று தொடங்கியது. இந்த சேவைக்கு இல்லத்தரசிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் காய்கறி-மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. இந்தநிலையில் பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் நோக்கி அரசு அனுமதி பெற்ற நடமாடும் காய்கறி-பழ வாகனங்கள் சென்று வருகின்றன.

அதேபோல மளிகை பொருட்களையும் நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. அதன்படி மொத்த சந்தைகளில் மளிகை பொருட்களை கொள்முதல் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகளுக்கும் அதற்கான அனுமதி சீட்டு வழங்கும் பணி கடந்த ஓரிரு நாட்களாக நடந்து வந்தது.

இந்தநிலையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவடைந்த நிலையில் நடமாடும் மளிகை கடைகள் சேவை நேற்று தொடங்கியது. சென்னையிலும் நடமாடும் மளிகை கடை வாகன சேவை நேற்று முதல் செயல்பட தொடங்கியது. முதற்கட்டமாக 2 ஆயிரத்து 200 கடைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியிருக்கிறது.

அதன்படி, குடியிருப்பு பகுதிகள் நோக்கி இந்த மளிகை கடை வாகனங்கள் நேற்று முதல் செல்ல தொடங்கின. மஞ்சள், உப்பு, சர்க்கரை, பொன்னி அரிசி, இட்லி அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், மல்லி, பூண்டு, புளி, ரவை, கோதுமை, சோப்பு, சீயக்காய், எண்ணெய் பாக்கெட்டுகள், மசாலா பாக்கெட்டுகள் என தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும் இந்த கடைகள் மூலம் நேற்று விற்பனை செய்யப்பட்டன.

இதுதவிர, கடைகளில் இருந்தும் தேவையான மளிகை பொருட்களை இல்லங்களுக்கு ஆர்டர் செய்து பெரும் சேவையும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட கடைக்காரர்கள் மற்றும் செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் www.chennaicorporation.gov.in எனும் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த இணையதள முகவரி மூலமாகவும், ‘நம்ம சென்னை ஆப்’ மூலமாகவும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கடைகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு வேண்டிய மளிகை பொருட்களை ஆர்டர் செய்து பெறமுடியும். இதனால் ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் மளிகை கடைகளை தேடி பொருட்கள் வாங்க தேவையில்லை என்ற சூழல் நிலவுகிறது.

இத்தனை நாட்களாக கடைகளை தேடி பொருட்கள் வாங்கும் நடைமுறையையே பின்பற்றி வந்த பொதுமக்கள், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் என்ன செய்வது? என்று தவித்திருந்தனர். தற்போது இல்லங்கள் மற்றும் குடியிருப்பு பகுதி நோக்கி மளிகை பொருட்கள் தேடி வரும் திட்டத்துக்கும் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து இல்லத்தரசிகள் சிலர் கூறுகையில், ‘‘கொரோனா காலத்தில் அரசின் இதுபோன்ற நடவடிக்கை பாராட்டத்தக்கது. வேண்டிய பொருட்களை வீடு தேடி கொண்டுவரும் இத்திட்டம் நல்ல திட்டமாகும். இதன்மூலம் தேவையில்லாமல் வெளியே சுற்றும்போக்கு வெகுவாக தவிர்க்கப்படும்’’, என்றனர்.

கொரோனா நேரம் என்பதால் பல கடைக்காரர்கள் சிறப்பு தள்ளுபடியையும், திட்டங்களையும் அறிவித்து இருக்கிறார்கள். 20 பொருட்கள் கொண்ட மளிகை பொருட்கள் தொகுப்பு ரூ.480-க்கும், ரூ.250-க்கு 10 பொருட்கள் கொண்ட தொகுப்பும், தள்ளுபடி விலையில் மொத்த மளிகை பொருட்கள் என பல சலுகைகளையும் அறிவித்திருக்கிறார்கள். இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடை விலையை விட நடமாடும் வாகனங்களில் மளிகை பொருட்களின் விலை ரூ.2 முதல் ரூ.3 வரை விலை அதிகமாகவே இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதேவேளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்றால் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story