200 படுக்கைகளுடன் கரூரில் ஆக்சிஜன் வசதி கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் - காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


200 படுக்கைகளுடன் கரூரில் ஆக்சிஜன் வசதி கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் - காணொலி காட்சி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 1 Jun 2021 1:55 AM GMT (Updated: 1 Jun 2021 1:55 AM GMT)

கரூரில் புதிதாக ஆக்சிஜன் வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

சென்னை,

கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் டவுண்ஷிப்பில் உள்ள சமுதாயக் கூடத்தில் 200 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகள் கொண்டவையாகும். இந்த சிகிச்சை மையத்திற்குத் தேவையான மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவப் பணியாளர்களுக்கான அறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர, ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சுமார் ரூ.1 கோடி செலவில், தேவையான உபகரணங்கள் இத்தாலி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அருகிலுள்ள கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கும் தேவையான ஆக்சிஜனை சிலிண்டர்களில் இங்கு நிரப்பி வழங்கவும் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மையத்தை சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கரூரிலிருந்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜோதிமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாம சுந்தரி, கரூர் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் செயல் இயக்குநர் எஸ்.வி.ஆர். கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜீவ் ரஞ்சன், தொழில் துறை சிறப்புச் செயலாளர் அருண் ராய் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Next Story