தட்டுப்பாட்டை போக்க புனேவில் இருந்து விமானத்தில் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது


தட்டுப்பாட்டை போக்க புனேவில் இருந்து விமானத்தில் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது
x
தினத்தந்தி 1 Jun 2021 7:16 PM GMT (Updated: 1 Jun 2021 7:16 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், புனேவில் இருந்து 5½ லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.

ஆலந்தூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை 44 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்தது.இந்த திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் காட்டி வந்தனர்.

இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை என்றும், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

நேரடி கொள்முதல்

மேலும், தமிழக அரசே நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது.

தமிழகத்திற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 96 லட்சம் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளும் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 3-ந்தேதிக்கு பின்னர் போதிய தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால், கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து 52 பெட்டிகளில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. அதில் 36 பெட்டிகளில் இருந்த 4 லட்சத்து 20 ஆயிரத்து 570 தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழக மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

தடுப்பூசிகள்

13 பெட்டிகளில் இருந்த 1 லட்சத்து 45 ஆயிரத்து 900 தடுப்பூசிகள் பெரிய மேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு 3 பெட்டிகள் கொண்டு செல்லபட்டன. தமிழகத்திற்கு மத்திய தொகுப்பு மற்றும் தமிழக அரசு கொள்முதல் என 5 லட்சத்து 66 ஆயிரத்து 470 தடுப்பூசிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story