மக்கட்தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசி வரப்பெறவில்லை - மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம்


மக்கட்தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசி வரப்பெறவில்லை - மத்திய சுகாதாரத்துறை மந்திரிக்கு தமிழக முதல்-அமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 2 Jun 2021 7:58 PM GMT (Updated: 2 Jun 2021 8:02 PM GMT)

மக்கட்தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து கொரோனா தடுப்பூசி வரப்பெறவில்லை என்று தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட தகவலின் படி, தமிழ்நாட்டில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 92 லட்சத்து 35 லட்சத்து 652 ஆக உள்ளது. அதில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்து 85 ஆயிரத்து 963 ஆக உள்ளது. 2வது டோஸ் செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 49 ஆயிரத்து 689 ஆக உள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தில் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய மாநில அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை தொடர்பாக, இன்னும் சில நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தமிழ்நாட்டின் மக்கட்தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து கொரோனா தடுப்பூசி வரப்பெறாததால் நிலவும் தட்டுப்பாட்டை நீக்க தடுப்பூசிகள் வழங்கவும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தும் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.



Next Story