தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2021 10:13 PM GMT (Updated: 2 Jun 2021 10:13 PM GMT)

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன், ஆசிரியர் தேர்வு வாரியத்தை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க தி.மு.க. அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியாகியிருப்பதை பார்க்கும்போது, “அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்” என்ற பழமொழிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பணிபுரிவதை கருத்தில் கொண்டு, மாணவ-மாணவியரின் நலனைக் காக்கும் வகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என்பதற்காக 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது.

காலதாமதம்

இந்த சூழ்நிலையில், கட்டமைப்பு இல்லாமை, பணியாளர்கள் இல்லாமை, நிபுணத்துவம் பெற்ற பணியாளர்கள் இல்லாமை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, நிதிச்சுமை ஆகியவற்றை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்துவிட்டு, அதனை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைப்பது என்பது காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதை காலதாமதமாக்கும் செயலாகும்.

எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் அந்த பணிகள் ஒப்படைக்கப்படுமேயானால், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதில் தொய்வு நிலை ஏற்படும். ஏனென்றால் லட்சக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் மிகப்பெரிய பொறுப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்கும்போது, அங்கும் பணியாளர் பற்றாக்குறை, கட்டமைப்பின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் எம்.ஜி.ஆர். உருவாக்கியது என்பதற்காக கலைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story