‘‘தமிழ் பசியாறியது உன் கையெழுத்தால், தமிழ்நாடு பசியாறுகிறது உன் தனயன் கையொப்பத்தால்’’; கருணாநிதி பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து புகழாரம்


‘‘தமிழ் பசியாறியது உன் கையெழுத்தால், தமிழ்நாடு பசியாறுகிறது உன் தனயன் கையொப்பத்தால்’’; கருணாநிதி பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து புகழாரம்
x
தினத்தந்தி 3 Jun 2021 5:08 PM GMT (Updated: 3 Jun 2021 5:08 PM GMT)

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ‘‘தமிழ் பசியாறியது உன் கையெழுத்தால், இன்று தமிழ்நாடு பசியாறுகிறது உன் தனயனின் கையொப்பத்தால்’’, என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

புகழாரம்

மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி 97-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு புகழாரம் சூட்டி ‘உங்கள் பேனாவால் எழுதிய கவிதை’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதை வருமாறு:-

நீயில்லாத பிறந்தநாள்....

கடல் இல்லாத சென்னை,

இமயம் புதைந்த இந்தியா.

அதிகாலையில் அழைக்க நீயில்லை என்று மவுனமே பாடுகின்றன, என் மரப் பறவைகள்.

முத்துவேல் அஞ்சுகம் கட்டிய முத்தமிழ்ச் சங்கமே...

துயரங்களால் மட்டுமே உயரம் தொட்டவன் நீ.

எரிமலையில் ஏறாமல் உன் அடுப்புக்கு நெருப்பு கிட்டியதில்லை

துரும்பை நகர்த்தவும் உனக்கு இரும்பு தேவைப்பட்டது

தொண்டர்களின் பொன்னாடை போர்த்துக்கொண்டு புண்ணாயிரம் மறைத்தவன் நீ

கவிஞர்களின் மெய்க்கீர்த்தி தவிர, உன் காதில் விழுந்ததெல்லாம் கயமையின் அவதூறுகளே.

ஆனாலும், நிலம்போல் பொறுமை காத்தாய்

உன்னை வெட்டியவர்க்கும் குறைந்தபட்சம் தண்ணீர் கொடுப்பாய், அதிகபட்சம் தங்கம் கொடுப்பாய்

ஏழையின் காலைக்குச் சோறாய், மாலைக்கு அரிசியாய், நாளைக்கு விதைநெல்லாய் ஆட்சி புரிந்த அதிசயம் நீ.

தமிழ் பசியாறியது உன் கையெழுத்தால்

இன்று தமிழ்நாடு பசியாறுகிறது உன் தனயனின் கையொப்பத்தால்

தன்னாட்சி கேட்டவரே உன் மகனின் பொன்னாட்சி கண்டு பூரிப்புறும்

நீ கொடுத்த பேனாவால் நின்புகழ் எழுதுகிறேன்

உன் நூற்றாண்டு மலர் தயாரிப்பேன்.

நூறு கவிஞர்களோடு வாசிக்க வருவீரா?...

இவ்வாறு தனது கவிதையை வைரமுத்து எழுதியுள்ளார்.

 


Next Story