தேசிய கல்விக்கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்


தேசிய கல்விக்கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
x
தினத்தந்தி 3 Jun 2021 8:52 PM GMT (Updated: 3 Jun 2021 8:52 PM GMT)

தேசிய கல்விக்கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தேசிய கல்விக்கொள்கை நடப்பு கல்வி சூழலுக்கு கட்டாயம் தேவைப்படுவது ஆகும். இந்திய கல்வி முறையை உலக கல்வி முறையோடு இணைக்கும் நோக்கில் இக்கல்விக் கொள்கை அமைந்துள்ளது. தொலைநோக்கு சீர்திருத்தங்களை கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த கல்விக்கொள்கை குறித்து சில கட்டுக்கதைகள் தற்போது நிலவிவருகிறது. ஆனால் அவை அனைத்தும் ஆதாரமற்ற, தவறான கருத்து ஆகும்.

தமிழக மக்கள் மீது இந்த கல்விக்கொள்கை இந்தியை திணிக்கிறது என்று கூறுகிறார்கள். இது ஆதாரமற்ற கருத்து. எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது என்று இக்கொள்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. உண்மையில் பள்ளிக்கூடங்களில் தாய்மொழி அல்லது மாநில மொழி வழிக்கல்வியை பரிந்துரைக்கிறது.

தவறான கருத்து

மாணவர்களுக்கு மும்மொழிக்கொள்கை சுமையானது என்று கூறுவதும் தவறான கருத்து. இந்த மும்மொழி திட்டம் பள்ளிகளில் 2 இந்திய மொழிகளுடன் ஒரு வெளிநாட்டு மொழியை கற்க வாய்ப்பு அளிப்பது ஆகும். இதில் 3 மொழிகளை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தி மாணவர்கள் வடிகட்டப்படுவார்கள் என்று கூறுகிறார்கள். இதுவும் உண்மை இல்லை.

இடையூறுகளை சந்திக்க நேரிடும்

கல்வி பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே மத்திய அரசின் கொள்கை முடிவுகளை செயல்படுத்துவது மாநில அரசுகளின் கடமை ஆகும். இக்கல்வி கொள்கையை செயல்படுத்த விரும்பாத மாநிலங்கள் தங்களுடைய உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பதில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். எனவே இந்த தேசிய கல்விக்கொள்கையை ஆற்றல் மிக்க, பகுத்தறிவு சிந்தனையுள்ள தங்களுடைய தலைமையில் செயல்படும் தமிழக அரசு நிச்சயமாக நமது மாநிலத்தின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ற மாற்றங்களுடன் மிகவும் சிறப்பாக செயல்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story