ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்பு: “மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் நன்றி’’


ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை ஏற்பு: “மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் நன்றி’’
x
தினத்தந்தி 3 Jun 2021 9:56 PM GMT (Updated: 3 Jun 2021 9:56 PM GMT)

‘‘எனது வேண்டுகோளை ஏற்று, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’, என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 27-ந்தேதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், ‘‘ஓய்வு பெற்ற போக்குவரத்துத்‌ தொழிலாளர்களுக்கும்‌ மருத்துவக்‌ காப்பீட்டை விரிவுபடுத்த வேண்டும். பணி ஓய்வு மற்றும்‌ விருப்ப‌ பணி ஓய்வு பெற்ற மற்றும்‌ உயிரிழந்த ஊழியர்களின்‌ ஓய்வு காலப்‌ பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்.’’, என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

இந்தநிலையில் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய பண பயன்களின் நிலுவைத்தொகையான ரூ.497.32 கோடியை, 2 ஆயிரத்து 457 ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.

நடவடிக்கைக்கு நன்றி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எனது வேண்டுகோளை ஏற்று, ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

விலைவாசி உயர்வு

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தாக்கம் ஒரு புறம் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. மறுபுறம் விலைவாசி உயர்வு அதைவிட மோசமான தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக மக்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலை உச்சத்தில் இருப்பதாக செய்திகள் வௌியாகியுள்ளது. இதேபோல், அரிசி, சர்க்கரை, உப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளன.

விலை நிறுத்தல் நிதியம்

எனவே விலைவாசி உயர்வதற்கு முக்கிய காரணமாக விளங்கும் கடத்தலையும், பதுக்கலையும், தடுக்கவும் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்கள் நியாயமான விலையில் வெளிச்சந்தையில் அத்தியாவசிய பொருட்களை பெறவும் தேவைப்பட்டால் விலை நிறுத்தல் நிதியத்தை ஏற்படுத்தி அதன்மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story