மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை


மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
x
தினத்தந்தி 3 Jun 2021 11:56 PM GMT (Updated: 3 Jun 2021 11:56 PM GMT)

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடு்ம் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் வளாகம் முழுவதும் தூய்மையாக்கப்பட்டு, நினைவிடம் மஞ்சள் வண்ணத்திலான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நினைவிடத்தின் மையப்பகுதியில் போராளியின் வழியில் தொடரும் வெற்றிப்பயணம் என்று மலர்களால் எழுதப்பட்டு இருந்தது.

ஆழ்வார்பேட்டை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8 மணிக்கு புறப்பட்டு 8.20 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு எம்.பி. கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் வந்தனர். அனைவரும் 2 நிமிடம் மவுனமாக நின்றனர். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசிய உருக்கமான பேச்சு ஒளிபரப்பானது.

மலர் தூவி மரியாதை

தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மலர் தூவினார்கள். தொடர்ந்து மாவட்டத்திற்கு ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 38 மாவட்டத்திற்கு 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் நினைவிடம் அருகில் முதல்-அமைச்சர் மரக்கன்று ஒன்றை நட்டு, தண்ணீர் ஊற்றினார்.

பின்னர் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்துக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு உள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோபாலபுரத்தில் நலத்திட்ட உதவிகள்

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அண்ணாசலையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அறிவாலயத்தின் முகப்பு தோற்றத்தில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதியின் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. கருணாநிதியின் சிலை கீழ் பகுதியில் கருணாநிதியின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் மலர் தூவினார்கள். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் நிவாரண பொருட்களையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் கருணாநிதி வசித்து வந்த கோபாலபுரம் வீட்டிற்கு சென்று தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். பின்னர் அங்கிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தயாநிதி மாறன் எம்.பி. உடனிருந்தார். தொடர்ந்து சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசி பெற்று, அங்கிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை முடித்து கொண்டு மீண்டும் சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டிற்கு காலை 9.55 மணிக்கு முதல்-அமைச்சர் வருகை தந்தார்.

நினைவிடத்தில் குடும்பத்தினர்

ராஜாத்தி அம்மாள், கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, அவருடைய மகன் நடிகர் அருள்நிதி, மகள் செல்வி உள்ளிட்ட குடும்பத்தினரும் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு வந்தனர். அவர்களும் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே எளிமையான முறையில் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கட்சி தொண்டர்கள் கூட்டம் எதுவும் இல்லாமல் காணப்பட்டது.

Next Story