பாலியல் புகார்: ஆசிரியர் ராஜகோபாலனின் நீதிமன்ற காவல் 8-ஆம் தேதி வரை நீட்டிப்பு - சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்


பாலியல் புகார்: ஆசிரியர் ராஜகோபாலனின் நீதிமன்ற காவல் 8-ஆம் தேதி வரை நீட்டிப்பு - சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம்
x
தினத்தந்தி 4 Jun 2021 10:55 AM GMT (Updated: 4 Jun 2021 10:55 AM GMT)

பத்மா சேஷாத்ரி பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், ஆசிரியர் ராஜகோபாலனின் நீதிமன்ற காவலை 8ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி பெற்றனர். இதையடுத்து அவரிடம் கடந்த 3 நாட்களாக நூற்றுக்கணக்கான கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

குறிப்பாக 5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து அதற்கு பதில் அளிக்கும்படி ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 250 கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர்.

குறிப்பாக பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே இது நடந்ததா? என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. மாணவர்களுக்கான வாட்ஸ்-அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்டது, அரைகுறை ஆடையோடு ஆன்லைன் வகுப்பு நடத்தியது பற்றியும் கேள்விகளை கேட்டனர். இந்த விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் தெரியவந்துள்ளது.

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர் ராஜகோபாலனுக்கு அதிகப்படியான தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், ஆசிரியர் ராஜகோபாலனின் நீதிமன்ற காவலை 8 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, மீண்டும் ராஜகோபாலன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story