அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் ரூ.3 கோடி கொரோனா நிவாரண நிதி மு.க.ஸ்டாலின் நன்றி


அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் ரூ.3 கோடி கொரோனா நிவாரண நிதி மு.க.ஸ்டாலின் நன்றி
x
தினத்தந்தி 4 Jun 2021 9:26 PM GMT (Updated: 4 Jun 2021 9:26 PM GMT)

அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி வழங்கப்பட்டது. இதற்காக மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

சென்னை,

வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் இணைந்து, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ஏற்கனவே ரூ.20 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்கி இருந்தனர்.

இந்தநிலையில் தற்போது, கொரோனா தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3 கோடி) நிதியாக வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார்.

கொரோனாவை விரைவில் ஒழிப்போம்

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு தற்போது 2 மிக முக்கியமான நெருக்கடியில் உள்ளது. ஒன்று கொரோனா என்ற நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி. இன்னொன்று, கடந்த 10 ஆண்டுகளாக ஏற்பட்ட நிதி நெருக்கடி.

இந்த இரண்டையும் சமாளிப்பதற்கான முன் முயற்சிகளை நான் முழுமையாக செய்து வருகிறேன்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை விரைவில் முற்றிலுமாக ஒழிப்போம். அதற்கு உதவும் வகையில் நீங்கள் சுமார் ரூ.3 கோடி நிதி வழங்கி உள்ளீர்கள்.

இந்த நிதியில் பல லட்சம் குடும்பங்கள் தெரிகிறது. கோடிக்கணக்கானவர் முகம் தெரிகிறது. நிதி வழங்கிய அனைவரையும் பெயர் சொல்லி நான் அழைத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி.

மக்களை வாழ வைக்கும்

இதற்கான முயற்சிகளை எடுத்த வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை, ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள், புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழர்களுக்காக உதவ முன் வந்த அமெரிக்க மக்கள், தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைவருக்கும் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நோயைக் குணப்படுத்துவது மருந்து மட்டுமல்ல, மற்றவர்களின் ஆறுதலும், நம்பிக்கையும்தான். அத்தகைய நம்பிக்கை விதையை நீங்கள் விதைத்துள்ளீர்கள். உங்கள் நிதி மக்களை வாழ வைக்கும். உங்கள் நிதி உயிர் கொடுக்கும் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜன் நடராஜன், பாலா சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பி, பாலகன் ஆறுமுகசாமி, ஜோதி ராதாகிருஷ்ணன், ராம் பிரசாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Next Story