வெப்ப சலனம்: தமிழக வட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


வெப்ப சலனம்: தமிழக வட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 4 Jun 2021 10:58 PM GMT (Updated: 4 Jun 2021 10:58 PM GMT)

வெப்ப சலனம் காரணமாக தமிழக வட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வெப்ப சலனம் மற்றும் தமிழகத்தின் தென் கடலோரம், குமரிக்கடல் - இலங்கை மற்றும் கர்நாடகம்- தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (சனிக்கிழமை) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

அதிகபட்ச மழை

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சித்தாறு பகுதியில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பெய்துள்ளது. சிவலோகத்தில் 12 செ.மீ., பேச்சிப்பாறையில் 11 செ.மீ., பெருஞ்சாணியில் 10 செ.மீ., மாரண்டஹள்ளியில் 9 செ.மீ., நிலக்கோட்டை, உசிலம்பட்டியில் தலா 7 செ.மீ., காரியாப்பட்டி, நாமக்கல்லில் தலா 6 செ.மீ. என மழை பதிவாகி உள்ளது.

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையிலான வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story