முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு: மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகளில் கூட்டம் சேரக்கூடாது வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை


முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு: மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகளில் கூட்டம் சேரக்கூடாது வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை
x
தினத்தந்தி 6 Jun 2021 7:05 PM GMT (Updated: 6 Jun 2021 7:05 PM GMT)

முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீன் மார்க்கெட்டுகள் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் அமலில் உள்ள முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதுடன், அதில் சில தளர்வுகளையும் அறிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் காய்கறி-மளிகை கடைகள், மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் இயங்க உள்ளன. இந்த கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வியாபாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் மண்டல அதிகாரிகள் விரைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது கூட்டம் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மொத்த விலையில் மட்டுமே மீன்கள் விற்பனை செய்யவேண்டும் என பல்வேறு அறிவுரைகளை வியாபாரிகளுக்கு வழங்கினர்.

கூட்டம் சேரக்கூடாது

அதேபோல ஆட்டிறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி சில்லரை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரைஷி கூறும்போது, ‘‘ஆட்டிறைச்சி வியாபாரத்துக்கு மீண்டும் அனுமதி அளித்த தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். அதேவேளை ஊரடங்கு விதிமுறைகளை கடைப்பிடித்து, கடைகளில் கூட்டம் சேராதவாறு, மக்கள் சமூக இடைவெளியில் இறைச்சி வாங்கி செல்ல ஏதுவான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வோம். அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’’ என்றார்.

ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்த பிறகு மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகளில் தொடர் ஆய்வு நடத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

Next Story