உயிரிழப்புகள் அதிகரிப்பது வேதனை தருகிறது கொரோனா தொற்று பரவலை குறைக்க உடனடி நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


உயிரிழப்புகள் அதிகரிப்பது வேதனை தருகிறது கொரோனா தொற்று பரவலை குறைக்க உடனடி நடவடிக்கை மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Jun 2021 9:15 PM GMT (Updated: 6 Jun 2021 9:15 PM GMT)

உயிரிழப்புகள் அதிகரிப்பது வேதனை தருகிறது என்றும், கொரோனா தொற்று பரவலை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா நோய் தொற்று பரவல் இறங்குமுகமாக இருக்கிறது என்பதும், குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும் ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கொரோனா நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது என்றும், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 100 பேரில் குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழக்கிறார் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு அதிகரிப்பு

கடந்த 10 நாட்களாக இந்த நிலை மேலும் அதிகரித்து காணப்படுகிறது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தாலும் உயிரிழப்போர் எண்ணிக்கை 460-க்கும் குறையாமல் இருந்து வருகிறது. கடந்த மே மாதம் 25-ந் தேதி 34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், உயிரிழப்பு 468 என்று இருந்தது. அதாவது பாதிக்கப்பட்டோரில் 1.36 சதவீதம் உயிரிழந்துள்ளனர்.

இந்த சதவீதம் படிப்படியாக அதிகரித்து கடந்த 4-ந் தேதி நிலவரப்படி பாதிக்கப்பட்டோரில் 2 சதவீதத்தினர் உயிரிழந்துள்ளனர். அதாவது 22,651 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 463 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னை மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 253 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது உயிரிழந்தோரின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட இரண்டு மண்டலங்களை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று இருக்கும் இந்த சூழ்நிலையில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். எனவே தமிழக முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி பாதிப்போரின் எண்ணிக்கையும், குணமடைவோரின் எண்ணிக்கையும் குறைந்து வரும் சூழ்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு நீக்கப்பட்டு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் உயிரிழப்புகள் அதிகமாகுவதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டுவிட்டரில் பதிவு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை தனது டுவிட்டர் பக்கத்திலும் ஓ.பன்னீர்செல்வம் பதிவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story