துணைத் தலைவர், முழு நேர உறுப்பினர், 8 பகுதி நேர உறுப்பினர்கள் நியமனம்: மாநில வளர்ச்சி கொள்கைக் குழு மாற்றியமைப்பு மு.க.ஸ்டாலின் உத்தரவு


துணைத் தலைவர், முழு நேர உறுப்பினர், 8 பகுதி நேர உறுப்பினர்கள் நியமனம்: மாநில வளர்ச்சி கொள்கைக் குழு மாற்றியமைப்பு மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 6 Jun 2021 11:08 PM GMT (Updated: 6 Jun 2021 11:08 PM GMT)

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை திருத்தியமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் மாநில திட்டக்குழு, கருணாநிதியால் 1971-ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக்குழு, முதல்-அமைச்சர் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக்குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாநில திட்டக்குழுவானது, 23.04.2020-ல் ‘‘மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக’’ மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திருத்தியமைப்பு

இந்தநிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத்தலைவராகவும், பேராசிரியர் இராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்,ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, மல்லிகா சீனிவாசன், டாக்டர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெ.ஜெயரஞ்சன்-இராம.சீனுவாசன்

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பொருளாதார மாற்றங்கள் குறித்து ஏறத்தாழ 65 ஆய்வு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

முழு நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இராம.சீனுவாசன், சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். பொருளியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று 30 ஆண்டுகளாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அமலோற்பவநாதன்-தீனபந்து

டாக்டர் ஜோ.அமலோற்பவநாதன், 1986-ம் ஆண்டு ஒரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக அரசுப் பணியில் சேர்ந்து, 30 ஆண்டுகள் பணிபுரிந்து சென்னை மருத்துவ கல்லூரி ரத்த நாள அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மற்றும் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது உருவாக்கிய உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று சுமார் 8 ஆண்டுகள் அந்த திட்டத்தை நிறைவேற்றியவர்.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான தீனபந்து, பொருளாதாரத்தில் எம்.ஏ. மற்றும் எம்.பில் பட்டங்கள் பெற்ற இவர், இந்திய ஆட்சியப் பணியில் சேருவதற்கு முன்பாக பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொருளாதார ஆய்வுத் துறையில் பணியாற்றியவர். தமிழக அரசில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வாரியம், நகராட்சி நிர்வாகத்துறை போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர்.

டி.ஆர்.பி.ராஜா-கு.சிவராமன்

மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார்குடி எம்.எல்.ஏ.வாக மக்கள் பணியாற்றி வருகிறார். இவர் ஆலோசனை உளவியல் மற்றும் மேலாண்மை படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினராகவும், மதிப்பீட்டுக்குழுவின் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் அங்கம் வகித்தவர்.

சித்த மருத்துவர் கு.சிவராமன், சித்த மருத்துவத்தில் பட்டமும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். சித்த மருத்துவத்தை அறிவியல் பார்வையுடன் தர நிர்ணயம் செய்து, அதன் பயனை உலகெங்கும் பரவலாக்கியதிலும், உலகெங்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தமிழ் மருத்துவ முறையாக நகர்த்தியமைக்கும் பெரும்பங்கு வகித்தவர்.

நர்த்தகி நடராஜ்-ம.விஜயபாஸ்கர்

முனைவர் நர்த்தகி நடராஜ் தனது நளினமான நடனத்தினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை பெற்றவர். உலக அளவில் எண்ணற்ற விருதுகளும், பட்டங்களும் பெற்றவர். இந்தியாவின் மிக உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதை பெற்ற முதல் திருநங்கை நடன கலைஞர் இவர்.

ம.விஜயபாஸ்கர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். அனைத்துலக தொழிலாளர் அமைப்பு, யுனிசெப், ஐக்கிய நாடுகளின் சமூக வளர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஆலோசகராகவும் இருந்திருக்கிறார்.

சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்-மல்லிகா சீனிவாசன்

பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், சென்னையில் உள்ள லாபநோக்கமற்ற அமைப்பான சுற்றுச்சூழல் அறிவியல் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனர், ஆலோசகர். மண்புழுக்களை பயன்படுத்தி மக்கும் கழிவுகளை மறுசுழற்சி தொழில்நுட்பங்களை மையமாக கொண்டு உரமாக மாற்றுவதிலும், மண் வளத்தை பெருக்குவதிலும் இவரது பங்களிப்பு அளவிடற்கரியது.

மல்லிகா சீனிவாசன், வேளாண் கருவிகள் உற்பத்தி செய்யும் டாபே நிறுவனத்தின்(டிராக்டர் அண்டு பார்ம் எக்யூப்மென்ட்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் அங்கம் வகிக்கும் நிறுவனம் இந்திய வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப் பெரும்பங்கு ஆற்றி வருகிறது. இவர் ‘பத்மஸ்ரீ' விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story