தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு 5 மணிநேரத்திற்கு பிறகு இ-பதிவு இணையதளம் செயல்படத் தொடங்கியது


தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு 5 மணிநேரத்திற்கு பிறகு இ-பதிவு இணையதளம் செயல்படத் தொடங்கியது
x
தினத்தந்தி 7 Jun 2021 11:37 AM GMT (Updated: 7 Jun 2021 11:37 AM GMT)

தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

சென்னை

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது.

இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. 

அதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டுனம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகமாக உள்ளதால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் போது இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான அனுமதி இருந்த நிலையில், அதிகமானோர் விண்ணப்பிக்கத் துவங்கியதால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு சென்று வேலை செய்யும் வகையிலும் இ-பதிவு இணைய தளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள்,  கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள்,  தனியார் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்களுக்கு இ- பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதல்  ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு இணையதளத்தில் குவிந்து பதிவு செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக  கூடுதல் இ-பதிவுக்கு அனுமதி கொடுத்த சிறிது நேரத்திலேயே இணையதளம் முடங்கியது. உள்ளே வந்தவர்கள் நீண்ட நேரம் முயற்சித்தும் இ-பதிவு செய்ய முடியாதததால் ஏமாற்றமடைந்தனர். 

 தற்போது தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு இ-பதிவு இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

Next Story