மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக கொரோனா நிவாரண பணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது


மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக கொரோனா நிவாரண பணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 7 Jun 2021 6:54 PM GMT (Updated: 7 Jun 2021 6:54 PM GMT)

மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக கொரோனா நிவாரண பணிக்கு ரூ.20 கோடி வழங்கப்பட்டது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பாக கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 கோடி ரூபாய்க்கான காசோலையினை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம், சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முதல்-அமைச்சர் நிவாரண பணிக்கு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கிராம உதவியாளர்களின் ஒருநாள் சம்பளத்தொகை ரூபாய் ஒரு கோடியே 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

தொ.மு.ச. பேரவை சார்பில் பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி. முதல்-அமைச்சர் பொது நிவாரண பணிக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 15 ஆயிரத்து 500-க்கான காசோலையை வழங்கினார். தமிழ்நாடு மூத்த பொதுப்பணித்துறை பொறியாளர் சங்கத்தின் செயலாளர் அ.வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் ரூ.21 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அலுவலராக இருந்த சி.கணேசன் தனது ஒரு மாத ஓய்வூதிய தொகை ரூ.36 ஆயிரத்து 264-க்கான காசோலையை வழங்கினார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story