5 நாட்களில் தமிழகத்துக்கு 6¾ லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு உறுதி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி


5 நாட்களில் தமிழகத்துக்கு 6¾ லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு உறுதி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2021 9:10 PM GMT (Updated: 7 Jun 2021 9:10 PM GMT)

5 நாட்களில் தமிழகத்துக்கு 6¾ லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தமிழக அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதே சமயத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பதற்காக ஊரடங்கினை தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரையிலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. தடுப்பூசி போதுமான அளவுக்கு கையிருப்பு இல்லாமல் பற்றாக்குறை நிலவுவதால், சில மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், அடுத்த சில நாட்களில் தமிழகத்துக்கு தடுப்பூசி டோஸ்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

6¾ லட்சம் தடுப்பூசி

இதுகுறித்து தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

பல ஊர்களில் நேற்று 32 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளன. தடுப்பூசி டோஸ்கள் இருக்கும் இடங்களில் மட்டும் கையிருப்பை பொறுத்து நாளை (இன்று) தடுப்பூசி போடப்படும். நாளை (புதன்கிழமை) முதல் 13-ந் தேதி வரை 5 நாட்களில் 6 லட்சத்து 75 ஆயிரத்து 40 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்துக்கு தரப்படும் என மத்திய அரசாங்கத்தின் சார்பில் வாய்மொழியாக வாக்குறுதி கிடைத்துள்ளது.

அந்த தடுப்பூசி வந்த உடன் மீண்டும் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போடப்படும். இதுதவிர பிரதமர் நரேந்திர மோடி, 21-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். விரைவில் தடுப்பூசி சப்ளை எப்படி செய்யப்படும் என்பது தொடர்பான தகவல் எங்களுக்கு வரும். இதையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்துக்கு எடுத்துச்சென்று அதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story