தனியார் ஆஸ்பத்திரிகள் மீதான புகாரை முறையாக கையாள வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


தனியார் ஆஸ்பத்திரிகள் மீதான புகாரை முறையாக கையாள வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2021 10:11 PM GMT (Updated: 7 Jun 2021 10:11 PM GMT)

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீதான புகாரை முறையாக கையாள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் நாதன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவரும் தனியார் ஆஸ்பத்திரிகளை அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

உரிமம் ரத்து செய்யப்படும்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘முதல்-அமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகளின் உரிமம் ரத்து செய்யப்படும். கூடுதல் கட்டண வசூல் தொடர்பாக புகார் அளிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தனியார் ஆஸ்பத்திரிகள் மீது நடவடிக்கை

அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரிகள் மீதான புகாரை முறையாக கையாண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகள் லாப நோக்குடன் செயல்படுவது கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேருவதற்காக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான உச்சவரம்பு 2 மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும். இதை தமிழக அரசு கருணையுடன் பரிசீலிக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story