36 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது


36 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது
x
தினத்தந்தி 7 Jun 2021 11:15 PM GMT (Updated: 7 Jun 2021 11:15 PM GMT)

தமிழகத்தில் 36 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.

சென்னை,

தமிழகத்தில் 36 நாட்களுக்கு பிறகு நேற்று தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதேபோல் தினமும் 400-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், 17 நாட்களுக்கு பிறகு நேற்று உயிரிழப்பும் 400-க்கும் கீழ் சரிந்தது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 60 ஆயிரத்து 385 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10,765 ஆண்கள், 8,683 பெண்கள் என மொத்தம் 19 ஆயிரத்து 448 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேருக்கும், 12 வயதுக்கு உட்பட்ட 711 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3,044 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

351 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 2,564 பேரும், சென்னையில் 1,530 பேரும், ஈரோட்டில் 1,646 பேரும், திருப்பூரில் 1,027 பேரும், சேலத்தில் 997 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 118 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 81 லட்சத்து 89 ஆயிரத்து 65 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 13 லட்சத்து 24 ஆயிரத்து 643 ஆண்களும், 9 லட்சத்து 32 ஆயிரம் பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 22 லட்சத்து 56 ஆயிரத்து 681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 12 வயதுக்கு உட்பட்ட 81 ஆயிரத்து 283 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 23 ஆயிரத்து 243 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 248 பேரும், தனியார் மருத்துவமனையில் 103 பேரும் என 351 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 40 பேர் பலி

அந்தவகையில் அதிகபட்சமாக சென்னையில் 40 பேரும், திருவண்ணாமலையில் 30 பேரும், கோவையில் 26 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், கன்னியாகுமரியில் 21 பேரும், ஈரோட்டில் 19 பேரும், காஞ்சீபுரத்தில் 18 பேரும், திருவள்ளூரில் 15 பேரும், திருச்சியில் 14 பேரும், நாமக்கலில் 13 பேரும், சேலத்தில் 12 பேரும், திருப்பூர், திருவாரூர், நாகப்பட்டினத்தில் தலா 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் தஞ்சாவூர், புதுக்கோட்டையில் தலா 9 பேரும், மதுரையில் 8 பேரும், விருதுநகர், கரூரில் தலா 7 பேரும், தூத்துக்குடியில் 6 பேரும், கடலூரில் 5 பேரும், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சியில் தலா 4 பேரும், விழுப்புரம், நீலகிரி, தர்மபுரியில் தலா 3 பேரும், வேலூர், திண்டுக்கலில் தலா 2 பேரும் என நேற்று மட்டும் 32 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

31,360 பேர் ‘டிஸ்சார்ஜ்’

உயிரிழந்தவர்களில் 83 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 27 ஆயிரத்து 356 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 31,360 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 19 லட்சத்து 97 ஆயிரத்து 299 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story