இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகிறது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது


இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்புகிறது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது
x
தினத்தந்தி 7 Jun 2021 11:26 PM GMT (Updated: 7 Jun 2021 11:26 PM GMT)

தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. மீன் மார்க்கெட்டுகள், காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியிருக்கிறது.

சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 10-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா தீவிரம் குறையாததால் ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி 7-ந் தேதி (நேற்று) காலை 6 மணி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு, அமலில் உள்ள ஊரடங்கை 14-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் ஊரடங்கில பல்வேறு தளர்வுகளையும் அவர் அறிவித்தார்.

காய்கறி-மளிகை கடைகள் திறப்பு

அதன்படி, தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நேற்று (திங்கட்கிழமை) காலை 6 மணியில் இருந்து அமலுக்கு வந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. அதேபோல மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள், சாலையோர கடைகள் உள்ளிட்டவைகளும் திறக்கப்பட்டன.

சென்னை வானகரம் போன்ற மீன் மார்க்கெட்டுகளில் அரசின் வழிமுறைக்கேற்ப மொத்த விற்பனையில் மட்டுமே மீன்கள் விற்பனை நடந்தது. பொதுமக்கள் நுழையாமல் மார்க்கெட் ஊழியர்கள் பார்த்து கொண்டனர். அரசின் கட்டுப்பாடுகள் குறித்து ஆங்காங்கே பேனர்களை வைத்திருந்தனர். அந்தவகையில் மக்கள் கூட்டம் சேராதவாறு பார்த்துக்கொண்டனர்.

இறைச்சி கடைகள்

காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அதேவேளை சிந்தாதிரிப்பேட்டை, காவாங்கரை, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெரம்பூர், வில்லிவாக்கம் உள்பட இதர மீன் மார்க்கெட்களில் சமூக இடைவெளி கடைபிடித்து மக்கள் மீன் வாங்கி சென்றனர்.

இதேபோல இறைச்சி கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. பல நாட்களுக்கு பிறகு இறைச்சி கடைகள் திறந்ததால் மக்கள் ஆர்வத்துடன் இறைச்சி, கோழிக்கறி, காடை உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். விரத நாளான நேற்று இறைச்சி கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்களில் எதிர்பார்த்த விற்பனை நடைபெறவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும் சார் பதிவாளர் அலுவலகம் உள்பட அரசு அலுவலகங்களும் செயல்பட தொடங்கின. இதுதவிர மின்சாதனங்கள் விற்பனை செய்யவும், பழுது பார்க்கவும், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் முழுவதும் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டதை பார்க்க முடிந்தது.

கோயம்பேடு, கொத்தவால்சாவடி சந்தைகள்

சென்னையில், அனைத்து காய்கறி-மளிகை கடைகளும் நேற்று வழக்கம் போல திறக்கப்பட்டன. ஏற்கனவே ஊரடங்கு காலத்தில் நடமாடும் காய்கறி-பழ விற்பனை வாகனங்களும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. என்றாலும், காய்கறி-மளிகை கடைகளில் நேற்றும் ஓரளவு மக்கள் கூட்டத்தை பார்க்கத்தான் முடிந்தது.

காய்கறி-மளிகை கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்த காரணத்தினால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நோக்கி நேற்று முன்தினம் இரவில் இருந்தே வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும் புறப்பட்டதை பார்க்க முடிந்தது. இதனால் கோயம்பேடு மார்க்கெட் முந்தைய பரபரப்புடன் காணப்பட்டது. வியாபாரிகளின் கூட்டமும் வெகுவாக இருந்தது. அதேவேளை மளிகை பொருட்கள் வாங்க வியாபாரிகள் காட்டிய ஆர்வத்தால் கொத்தவால்சாவடி உள்பட நகரின் முக்கிய மளிகை வணிகம் நடைபெறும் இடங்களில் கூட்டம் காணப்பட்டது.

சாலையோர கடைகள்

அதேபோல சாலையோர கடைகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் சாலையோரங்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு பழங்கள், காய்கறி, பூ விற்பனை நடக்க தொடங்கியது. மேலும் ஹார்டுவேர், மின் பொருட்கள், வாகன உதிரி பாக விற்பனை செய்யும் கடைகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் அந்த கடைகளில் மெக்கானிக் உள்ளிட்ட தொழிலாளிகள் சென்று வேண்டிய பொருட்களை வாங்கினர்.

இப்படி ஓரளவு கடைகள் திறக்கப்பட்ட காரணத்தால் பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், பாரிமுனை, புரசைவாக்கம், துறைமுகம், தியாகராயநகர் உள்பட சென்னையில் கடைவீதிகள் நிறைந்த பகுதிகள் மீண்டும் பழைய சுறுசுறுப்பை பெற தொடங்கியதை பார்க்க முடிந்தது. புத்தக விற்பனை நிலையங்களும் ஓரளவு திறக்கப்பட்டன. இதனால் திருவல்லிக்கேணி, பாரிமுனை, அல்லிகுளம் பகுதிகளில் பல புத்தக கடைகள் திறக்கப்பட்டன.

மாலை 5 மணி வரை

அந்தவகையில் காய்கறி-மளிகை கடைகள், மீன் மார்க்கெட்டுகள், இறைச்சி கடைகள் மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து கடைகளும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட்டன. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டுமே நடந்தது. பாரிமுனை அருகேயுள்ள சைனா பஜார் பகுதியில் 30 சதவீத செல்போன் உதிரி பாக விற்பனை கடைகள் திறந்திருந்தன.

மற்றபடி முந்தைய ஊரடங்கில் அறிவித்தபடி டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள், சலூன்-அழகு நிலையங்கள், துணிக்கடைகள், மால்கள், கோவில்கள், சுற்றுலா-பொழுதுபோக்கு தலங்கள், பஸ் சேவை, உயிரியல் பூங்காக்கள், ஜிம்கள் போன்றவற்றுக்கான தடைகள் தொடருகின்றன.

இயல்பு வாழ்க்கை திரும்புகிறது

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகமாக இருப்பதால், அங்கு மட்டும் சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 10-ந் தேதிக்கு முன்பு வரை காய்கறி-மளிகை கடைகள் (அனுமதி அளிக்கப்பட்ட நேரங்களில்) வழக்கம்போல செயல்பட்டன. அதனைத்தொடர்ந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடைகள் செயல்படாமலேயே இருந்து வந்தது. இந்தநிலையில் பல நாட்களுக்கு பிறகு கடைகள் நேற்று திறக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்ப தொடங்கியிருப்பதை உணர முடிகிறது.

Next Story