பிளஸ்-1 மாணவர்களுக்கு ஜூன் 3-வது வாரத்தில் இருந்து வகுப்புகள் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


பிளஸ்-1 மாணவர்களுக்கு ஜூன் 3-வது வாரத்தில் இருந்து வகுப்புகள் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x
தினத்தந்தி 8 Jun 2021 8:52 PM GMT (Updated: 8 Jun 2021 8:52 PM GMT)

பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு 3-வது வாரத்தில் இருந்து வகுப்புகள் தொடங்கலாம் என்றும், பிளஸ்-2 வகுப்புக்கு பாடங்கள் நடத்தலாம் என்றும் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

சென்னை,

கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆண்டு இறுதித் தேர்வும், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. பொதுவாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

அந்தவகையில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எந்த வகையில் வழங்குவது? என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்வித்துறை சார்பில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யலாம்

* சென்னை ஐகோர்ட்டு வழக்கில் தனியார் சுயநிதி பள்ளிகள் பிளஸ் -1 வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

* தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல் நிலைப்பிரிவுகளில் ஏற்கனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்குட்பட்டு மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

* அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்கள் சேர்த்திடலாம்.

3-வது வாரத்தில் இருந்து வகுப்புகள்

* மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வர பெறுகிறதோ?, அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அந்த பாடப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து 50 கொள்குறி வகை வினாக்கள் அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கி, அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

* பிளஸ் -1 வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3-வது வாரத்தில் இருந்து அப்போது கொரோனா பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளை தொடங்கலாம்.

* 2021-22-ம் கல்வியாண்டில் பிளஸ் -2 வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத் தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story