கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அரசு முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு


கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அரசு முடிவெடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Jun 2021 10:42 PM GMT (Updated: 8 Jun 2021 10:42 PM GMT)

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய அரசு சார்பில் நிவாரணம் வழங்கவும், அவர்களது வாரிசுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

அதேவேளையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனைப் பாதுகாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். கோவை சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா பரவல் குறையாததால் அங்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

விளம்பரத்துக்காக மனு தாக்கல்

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரங்களை எதிர்த்து தொடரப்படும் பெரும்பாலான பொதுநல வழக்குகள் விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்படுவதாக குறிப்பிட்டனர்.

அரசுதான் முடிவெடுக்க வேண்டும்

அதன்பின்பு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும்.

அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது. கொரோனா விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவை கோர்ட்டு தலையீடு இல்லாமல் தொடரவேண்டும்.

கொரோனா கட்டுக்குள் உள்ளது

கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் கொரோனா கட்டுக்குள் இருப்பதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

ஒருவேளை நடவடிக்கை தேவைப்பட்டால், கொரோனா சிகிச்சை தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story