கடும் விலை உயர்வை கண்டித்து பெட்ரோல் நிலையங்கள் முன்பு நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி அறிக்கை


கடும் விலை உயர்வை கண்டித்து பெட்ரோல் நிலையங்கள் முன்பு நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி அறிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2021 9:12 PM GMT (Updated: 9 Jun 2021 9:12 PM GMT)

கடும் விலை உயர்வை கண்டித்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை,

கொரோனா பேரிடர் காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக ஏறி வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-யை தாண்டிவிட்டது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் விலையில் ரூ.25.72, டீசல் விலையில் ரூ.23.93 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 96.23 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.90.38 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 43 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம்

2014-ல் ரூ.410 ஆக இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.819 ஆக இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருட்கள் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரி நாளை (வெள்ளிக் கிழமை) முதல் நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

அதையொட்டி தமிழகத்தில் நடைபெறுகிற போராட்டங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிரிவுகள் மற்றும் துறைகளின் தலைவர் ஆகியோர் பங்கேற்க வேண்டும். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

போராட்டத்தின்போது அனைவரும் முககவசம் அணிந்து, கண்டனப் பதாகைகளை தாங்கிக் கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story