எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை 21-ந்தேதி கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்


எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை 21-ந்தேதி கூடுகிறது கவர்னர் உரையாற்றுகிறார்
x
தினத்தந்தி 9 Jun 2021 11:26 PM GMT (Updated: 9 Jun 2021 11:26 PM GMT)

கவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 21-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சட்டசபை தேர்தல் முடிவைத்தொடர்ந்து தி.மு.க. அரசு பதவி ஏற்றது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர். பின்னர் சட்டசபையின் சபாநாயகராக தி.மு.க.வைச் சேர்ந்த மு.அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சட்டசபை கூடுகிறது

இந்த நிலையில், 16-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர், கவர்னர் உரையுடன் 21-ந் தேதியன்று தொடங்குவதாக சபாநாயகர் மு.அப்பாவு நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சபாநாயகர் மு.அப்பாவு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழக சட்டசபையில் 21-ந் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்த உள்ளார். அவர் உரை நிகழ்த்திய பின்னர், சட்டமன்ற அலுவல் குழு கூட்டம் நடைபெறும். இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும்? என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படும்? என்பது அதில் முடிவு செய்யப்படும். இதற்கு கவர்னர் இசைவு தந்துள்ளார்.

சட்டமன்ற கூட்டத் தொடர், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும். சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாமல் அங்கு பணியாற்ற வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். தொற்றில்லை என்ற முடிவு வந்தவர்கள் மட்டுமே சட்டசபைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

சட்டசபையில் இருக்கைகள், சமூக இடைவெளியுடன் போடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் சட்டமன்றம் நடைபெறும்போது கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகள் அனைத்தும் கடைபிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்சிகளுக்கு சமவாய்ப்பு

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு சபாநாயகர் மு.அப்பாவு அளித்த பதில் வருமாறு:-

சட்டமன்றத்தில் ஆளும் கட்சி, கூட்டணிக் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், அனைத்து கட்சியினருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டு, ஜனநாயக முறையில் அவை நடத்தப்பட வேண்டும் என்பது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணம். அந்த அடிப்படையில்தான் சட்டமன்ற கூட்டத் தொடர் அனைத்தும் நடைபெறும்.

மானியக் கோரிக்கை கூட்டமும் இந்த கூட்டத் தொடருடன் தொடருமா? என்று கேட்டால், அலுவல் ஆய்வுக் குழுவில்தான் சட்டசபை அலுவல்கள் பற்றி முடிவு செய்யப்படும்.

கவர்னர் உரை முடிந்த பின்னர், மறுநாளில் அந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். அதில் விவாதிப்பதற்கு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். கூட்டத் தொடரின் கடைசி நாளில் முதல்-அமைச்சர் அதற்கு பதிலுரை ஆற்றுவார்.

கேள்வி- பதில்

சட்டசபை பணிக்கு வருகிறவர்கள், தடுப்பூசி போட்டு இருந்தாலும் அவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். முதல் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இருக்குமா? இல்லையா? என்பதும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. ஏனென்றால், கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றிற்கு பதில்கள் வந்திருக்க வேண்டும். பதில் இன்னும் வரவில்லை.

கவர்னர் உரை நிகழும் கூட்டத் தொடருக்குப் பிறகுதான் உறுப்பினர்கள் பலரும் கேள்விகள் கேட்பார்கள் என்று நினைக்கிறேன். தற்போது ஊரடங்கு உத்தரவு நீடிப்பதாலும், அலுவல்களில் முழு நேரப் பணி நடைபெறாததாலும் பதில்கள் வருவதிலும் தாமதம் இருக்கும். பதில்கள் வந்த பின்புதான் சட்டசபையில் கேள்வி எழுப்ப அனுமதி அளிக்கப்படும். எனவே இந்த கூட்டத் தொடரில் கேள்வி பதில் நிகழ்வு இருப்பது சந்தேகம்தான்.

கொரோனா காலகட்டம் என்றாலும் அவையை நடத்துவதில் சவால்கள் இருப்பதாக தெரியவில்லை. ஏற்கனவே எம். எல்.ஏ.க்கள் பதவிப் பிரமாணம் மற்றும் சபாநாயகர் தேர்தல் எப்படி சமூக இடைவெளியோடு நடந்ததோ, அதுபோன்றே நடைபெறும். அவையை நடத்துவதில் பிரச்சினை இருக்காது.

எம்.எல்.ஏ.க்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுவிட்டதா? என்பது அவை கூடும் முதல் நாளில் தெரியும். அவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்புவது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Next Story