விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் - பாளையங்கோட்டை சிறை அதிகாரிகள் பணியிடமாற்றம்


விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் - பாளையங்கோட்டை சிறை அதிகாரிகள் பணியிடமாற்றம்
x
தினத்தந்தி 10 Jun 2021 4:28 AM GMT (Updated: 10 Jun 2021 4:28 AM GMT)

பாளையங்கோட்டை சிறையில் ஏற்பட்ட மோதலில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் சிறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை,

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலின் காரணமாக திருநெல்வேலி மாவட்டம் வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறைக்கைதி முத்துமனோ என்பவர் அங்குள்ள கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறைக்கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. மேலும் சிறை ஜெயிலர் உள்ளிட்ட ஊழியர்கள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

இதற்கிடையில் சிறையில் கொல்லப்பட்ட முத்துமனோவின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள், இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சிறைச்சாலையின் கண்காணிப்பாளரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 45 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது சிறைத்துறை உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக திருச்சி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சங்கரை பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளராக நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அதே போல கொலை சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த ஜெயிலர் பரசுராமன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து உயிரிழந்த முத்துமனோவின் உறவினர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story