ஈழத்தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா நாடாளுமன்ற தீர்மானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் மோடிக்கு, வைகோ கடிதம்


ஈழத்தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா நாடாளுமன்ற தீர்மானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் மோடிக்கு, வைகோ கடிதம்
x
தினத்தந்தி 10 Jun 2021 9:05 PM GMT (Updated: 10 Jun 2021 9:05 PM GMT)

ஈழத்தமிழர் பிரச்சினையில் அமெரிக்கா நாடாளுமன்ற தீர்மானத்தை மத்திய அரசு கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியில், இந்தியப் பெருங்கடலில் சீனமயமாக்கல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இலங்கை தலைநகர் கொழும்புவில் ஒரு நிலப்பரப்பை, சீனாவுக்குக் கொடுத்து விட்டனர். தமிழ் ஈழத்தைக் காக்கவும், ஈழத்தமிழர்களின் இறையாண்மையை நிலைநாட்டவும் இந்தியா தவறினால், இந்தியப் பெருங்கடலில் ஆளுமையை இழக்க நேரிடும்; சீனாவுக்கு இடம் தருவதாக ஆகி விடும்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் 117-வது கூட்டத்தொடரின் முதலாவது அமர்வில், நிறைவேற்றப்பட்ட 413-வது தீர்மானம், ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை விரிவாகப் பட்டியலிட்டு, உலக நாடுகள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருக்கின்றது. அந்தத் தீர்மானத்தின் சில பகுதிகளை, இங்கே மேற்கோள் காட்ட விழைகின்றேன்.

இரங்கல்

அதில், ஆயுதப் போரின்போதும், அதைத் தொடர்ந்தும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, தங்களது அன்புக்கு உரியவர்கள் இருக்கின்ற இடம் குறித்து, இதுவரை எந்தத் தகவலும் இல்லை; போரின் முடிவில், அரசாங்கத்திடம் சரண் அடைந்தவர்கள் குறித்தும், இதுவரை எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை. எனவே, இந்த அவை நிறைவேற்றும் தீர்மானம்: பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பன்னாட்டு அளவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய வேளை இது.

ஆயுதப் போரின் போதும், அதைத் தொடர்ந்தும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினருக்கு, தங்களது அன்புக்கு உரியவர்கள் இருக்கின்ற இடம் குறித்து, இதுவரை எந்தத் தகவலும் இல்லை; போரின் முடிவில், அரசாங்கத்திடம் சரண் அடைந்தவர்கள் குறித்தும், இதுவரை எந்தப் பட்டியலும் வெளியிடப்படவில்லை. எனவே, இந்த அவை இலங்கையில் ஆயுதப் போர் முடிந்த 12-ம் ஆண்டு நினைவு நாளில், போரினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தலையிடக்கூடாது

இறந்தவர்களின் நினைவை மதித்துப் போற்றுகின்றது; நல்லிணக்கம், மறுவாழ்வு, இழப்பீடு மற்றும் சீர்திருத்தங்களுக்கான தேடலில், இலங்கையில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் உறுதுணையாக இருக்க உறுதி பூணுகின்றது; மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் முன்னுரிமை அளித்த, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மன்றத்தைப் பாராட்டுகின்றது; இந்த நடவடிக்கைகளில், இலங்கை அரசு தலையிடக் கூடாது.

இலங்கையில் வரலாற்றுக் காலந்தொட்டு ஒடுக்கப்பட்டு வருகின்ற, வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் வாழ்கின் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும்படி, பன்னாட்டு சமூகத்தை வலியுறுத்துகின்றது; இன மோதல்களுக்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முழுமையான அரசியல் தீர்வை நோக்கி செயல்பட வேண்டும்.

வாக்குப்பதிவு

இலங்கையில் போரின்போது நிகழ்ந்த கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறலுக்கான, நம்பகமான மற்றும் பயனுள்ள, பன்னாட்டுப் பொறிமுறையை நிறுவ, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுமாறு, அமெரிக்காவை வலியுறுத்துகின்றது.

இவ்வாறு, அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது.

எனவே, இதை கருத்தில் கொண்டு உலக வரைபடத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்கள் ஆக்கியதுபோல், வங்கதேசம் என்ற நாட்டை இந்தியா ஆக்கியது போல், தமிழ் ஈழம் என்ற நாட்டை அமைப்பதற்கு, ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில், உலகம் முழுமையும் பல நாடுகளில் பரவி வாழ்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்குப்பதிவு நடத்துவதற்கான முயற்சிகளை, இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story