அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா? ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்யக்கூடாது மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா? ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்யக்கூடாது மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Jun 2021 9:53 PM GMT (Updated: 10 Jun 2021 9:53 PM GMT)

சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்யக்கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

ஏழை-எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும் தரமான உயரிய சிகிச்சையை இலவசமாக பெறும் வகையில் டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரிக்கு இணையான வசதிகளுடன் பலதுறை உயர் சிறப்பு ஆஸ்பத்திரியை சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணாசாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், உருவாக்கியதோடு, அங்கு ஒரு மருத்துவக் கல்லூரியையும் ஜெயலலிதா ஏற்படுத்தினார்.

2011-ம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன், ஓமந்தூராரில் அமைந்துள்ள கட்டிடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை என்பதாலும், பயன்படுத்தக்கூடிய இடம் வெகுகுறைவாக இருப்பதால், அலுவலக பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், இந்த கட்டிடம் இல்லை என்பதாலும், இருவேறு கட்டிடங்களில் இருந்து தலைமைச்செயலகம் செயல்பட முடியாது என்பதாலும், சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து இயங்க வழிவகை செய்துவிட்டு, அந்த இடத்தில் பலதுறை உயர் சிறப்பு ஆஸ்பத்திரி மற்றும் அரசு மருத்துவக்கல்லூரியையும் உருவாக்கினார்.

வருத்தம் அளிக்கிறது

கொரோனா காலக்கட்டத்தில், இந்த ஆஸ்பத்திரியில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அனுமதிக்கப்பட்டு, நல்ல சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்த சூழ்நிலையில், கிண்டியில் உள்ள கிங் ஆய்வக வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் பல்நோக்கு ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, அதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்ததை தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரி கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்த கட்டிடம் மீண்டும் சட்டமன்றமாகவோ அல்லது சட்ட மேலவையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன. இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருடைய மனங்களிலும் எழுந்துள்ளது. புதிதாக பல்நோக்கு ஆஸ்பத்திரியை கிண்டி கிங் வளாகத்தில் உருவாக்குவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில், ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி அங்கிருந்து கிங் மருத்துவ வளாகத்துக்கு மாற்றப்படுவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரி அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை உடன் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மோடிக்கு கடிதம்

பிரதமர் நரேந்திரமோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள பள்ளிக்கல்வி மற்றும் கல்வியறிவு துறையின் சார்பில் வெளியிடப்பட்ட 2019-2020-ம் ஆண்டின் செயலாக்க வகைப்படுத்துதல் குறியீட்டில் தமிழ்நாடு 90 சதவீத இலக்கை கடந்து சாதனை படைத்துள்ளதோடு, நான்கு இதர மாநிலங்களுடன் சேர்ந்து முதல் நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட குறியீட்டின்படி, தமிழ்நாட்டின் கல்வித்தரம் மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே, மருத்துவப் படிப்புகள் உள்பட அனைத்து தொழில் படிப்பு மற்றும் இதர படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களின் திறமையை பரிசோதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது கருத்து.

எனவே, நீட் உள்பட அனைத்து நுழைவுத்தேர்வுகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளித்து, அனைத்து மேற்படிப்புகளுக்குமான சேர்க்கையை 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Next Story