மாநில செய்திகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றம் + "||" + Public frustrated over ongoing vaccine shortage in Nellai, Tenkasi and Thoothukudi districts

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றம்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் அனைத்து தடுப்பூசி மையங்களும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள பொதுமக்கள், நிலைமையை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நெல்லை,

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து தடுப்பூசி போடப்பட்டு வந்தது. சமீபத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது.

ஆனால் திடீரென்று தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. கடந்த 1 வாரமாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல்வேறு மையங்கள் மூடப்பட்டன. ஒருசில மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தடுப்பூசி மருந்து இருப்பு அடிப்படையில் போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முழுமையாக தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையமும் மூடப்பட்டது. அங்கு நேற்றும் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தனர். அவர்களை கல்லூரி நுழைவு வாசலிலேயே காவலாளிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

தடுப்பூசி வந்த பிறகே மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் சிலர் இதையும் மீறி தடுப்பூசி மையத்துக்கு சென்று அங்குள்ள அறிவிப்பு பலகையை பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மையத்தில் தடுப்பூசி போட வந்தவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

முதல் தவணை தடுப்பூசி மட்டுமல்லாமல், 2-வது தவணை தடுப்பூசி போடுவோருக்கும் மருந்து இல்லாமல் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்கள் கழித்த உடன் அவரவர் செல்போனுக்கு 2-வது தவணை தடுப்பூசி போடுவது குறித்த குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. இதையொட்டி அவர்கள் தடுப்பூசி மையங்களுக்கு சென்றால், தடுப்பூசி இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு கடந்த 3 நாட்களாக இளைஞர்கள், இளம்பெண்கள், பொதுமக்கள் தடுப்பூசிக்காக அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த சிலர் கூறுகையில், ‘‘அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. தற்போதுதான் 18 வயது முதல் 44 வயது உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வாய்ப்பு வழங்கியது. ஆனால் சில நாட்களிலேயே தடுப்பூசி மருந்து இல்லை என்று கூறி தடுப்பூசி போடும் பணியை நிறுத்தி உள்ளனர். எனவே விருப்பம் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு தேவையான தடுப்பூசி மருந்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வாங்கி பயன்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்றும் யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை. இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் வேளையில், தடுப்பூசி கிடைக்காததால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தென்காசி மாவட்டத்துக்கு அதிகளவில் தடுப்பூசி தேவைப்படுகிறது. தற்போது 1,000 தடுப்பூசிகள் மட்டும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை வைத்து எப்படி போடுவது என்பது தெரியவில்லை’ என்று கூறினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று தடுப்பூசி போடும் மையங்கள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தன. மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என மொத்தம் 88 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதுதவிர கிராமப்புறங்களில் நடமாடும் தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி போடப்பட்டது.

ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் தற்போது தடுப்பூசி கிடைக்காததாலும் தடுப்பூசி போடும் பணி முடங்கிப்போய் உள்ளது. இதனால் மையங்களுக்கு தடுப்பூசி போட வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும் நிலைமையை சரிசெய்து தடுப்பூசி போடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லையில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
2. நெல்லையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுமானத்தின் போது ஆற்று மணலை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
‘ஸ்மார்ட் சிட்டி’ கட்டுமானத்தின் போது ஆற்று மணலை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
3. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு
நெல்லையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதியவர் பலியானார்.
5. நெல்லை, தூத்துக்குடியில் திடீர் மழை; சூறைக்காற்றில் வீடுகள் சேதம்
நெல்லை, தூத்துக்குடியில் நேற்று திடீர் மழை பெய்தது. சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியதால் வீட்டின் மேற்கூரைகள் பெயர்ந்து சேதமடைந்தன.