முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை
x
தினத்தந்தி 11 Jun 2021 12:23 AM GMT (Updated: 11 Jun 2021 12:23 AM GMT)

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சிக்கு வருகிறார். கல்லணை கால்வாய் சீரமைப்பு பணியை ஆய்வு செய்யும் அவர் குழுமணி அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியையும் பார்வையிடுகிறார்.

திருச்சி,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருச்சி வருகிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து கார் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு கல்லணை கால்வாய் நவீனப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதி வரை தடையின்றி செல்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தை முடித்து விட்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் திருச்சி வருகிறார். திருச்சியை அடுத்த குழுமணி அருகே உய்யகொண்டான் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் கொடிங்கால் வாய்க்காலின் தலைப்பு பகுதி புலிவலம் மணல் போக்கியிலிருந்து 280 மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை பார்வை யிடுகிறார்.

அதன் பின்னர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் சிறப்பு விமானம் மூலம் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருவதையொட்டி திருச்சியில் இருந்து தஞ்சாவூர் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கொடிங்கால் வாய்க்காலில் முதல்-அமைச்சர் பார்வையிடும் இடத்தை நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் முக்கொம்பிலும் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story