சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்யவேண்டும் மத்திய மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி காவிரியில் உரிய அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்யவேண்டும் மத்திய மந்திரிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:13 PM GMT (Updated: 11 Jun 2021 10:13 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி காவிரியில் இருந்து உரிய அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று மத்திய மந்திரிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

காவிரி டெல்டா பகுதி தான் எங்கள் மாநிலத்துக்கு உணவளிக்கும் அட்சய பாத்திரமாக உள்ளது. மேலும் அப்படிப்பட்ட டெல்டா பகுதியின் வாழ்வாதாரமாக இருப்பது மேட்டூர் அணைதான். நாங்கள் மிகவும் நம்பியிருப்பது விவசாய உற்பத்தியைத்தான். இந்த ஆண்டும் டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர்மட்டத்தையும், தென்மேற்கு பருவமழையின் அளவையும் கணக்கிட்டு மேட்டூர் அணையை பொதுவாக திறக்கும் நாளான ஜூன் 12-ந்தேதி (இன்று) திறப்பதற்கு நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, காவிரியில் இருந்து நீர் திறந்து விடப்படுவதை கருத்தில்கொண்டுதான் இந்த நீர்திறப்பை நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தென்மேற்கு பருவமழையால் டெல்டா பகுதிக்கு போதிய அளவு பலன் கிடைக்காது. எனவே குறுவை சாகுபடி, எப்போதுமே மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரைதான் முற்றிலும் நம்பியுள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தாமதமானால் பயிரிடப்பட்ட பயிர்களும், அடுத்த மாதத்தில் இருந்து பயிரிட திட்டமிடப்பட்டுள்ள சம்பா சாகுபடிக்கும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே சுப்ரீம் கோர்ட்டு நிர்ணயித்துள்ள நீரின் அளவை அந்தந்த மாதத்துக்கு காவிரியில் இருந்து திறந்துவிடப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். அதன்மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடக்கும் குறுவை சாகுபடிக்கு பயன் கிடைக்கும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. தண்ணீரும் நாங்கள் பெறவேண்டும்.

உடனடி தலையீடு

எனவே நீங்கள் தேவையான நடவடிக்கை எடுத்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அந்தந்த மாதத்துக்கான நீர் திறப்பை உறுதி செய்வதற்கு உத்தரவிட வேண்டும். லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையொட்டி நிற்கும் இந்த விஷயத்தில் நீங்கள் உடனடியாக தலையிடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story