விவசாயிகளிடம் கடன் தொகையை வசூலிக்க அவகாசம் கோரி வழக்கு: முதல்-அமைச்சர் கடிதத்தின் பேரில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


விவசாயிகளிடம் கடன் தொகையை வசூலிக்க அவகாசம் கோரி வழக்கு: முதல்-அமைச்சர் கடிதத்தின் பேரில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Jun 2021 10:17 PM GMT (Updated: 11 Jun 2021 10:17 PM GMT)

விவசாயிகளிடம் கடன் தொகையை வசூலிக்க அவகாசம் கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக முதல்-அமைச்சர் அனுப்பிய கடிதத்தின்பேரில் எடுத்த நடவடிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 4 வருடங்களாக உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. இதனால் 75 சதவீத டெல்டா நிலங்களில் விவசாயம் நடைபெறவில்லை. மேலும் குளங்கள், ஆறுகள், கிணறுகளில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் இருப்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 90 சதவீத விவசாய பணிகள் நடக்கவில்லை.

இதனால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும்படி விவசாய சங்கங்களின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சமீபத்தில் விவசாய கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்தது.

ஆனால் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் மற்றும் விவசாயத்துக்கு உபயோகப்படுத்தும் டிராக்டர் மற்றும் பல்வேறு சாதனங்கள் வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட கடன்கள் ஆகியவற்றை வசூலிப்பதில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றபடுகின்றன.

2 வருடம் அவகாசம்

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக விவசாயிகள் நாளுக்கு நாள் வறுமையில் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடன்களை கட்ட முடியாத நிலை ஏற்படுவதால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க தேசிய வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை திருப்பி செலுத்துவதற்கு 2 வருடம் அவகாசம் வழங்குமாறும், அதுவரை கடனை வசூலிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நடவடிக்கை என்ன?

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய கடன் தளர்வு ஆகியவை மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் கோர்ட்டு தலையிட முடியாது. ஆனால், விவசாயிகளின் கடன் பிரச்சினையை தமிழக முதல்-அமைச்சர், மத்திய அரசிடம் கடிதம் மூலம் கொண்டு சென்றுள்ளார். அதன் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று மத்திய அரசு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை அடுத்த மாதம் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story