ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு: மு.க.ஸ்டாலின் 16-ந் தேதி டெல்லி பயணம் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசுகிறார்


ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு: மு.க.ஸ்டாலின் 16-ந் தேதி டெல்லி பயணம் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசுகிறார்
x
தினத்தந்தி 11 Jun 2021 11:10 PM GMT (Updated: 11 Jun 2021 11:10 PM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தியையும் சந்தித்து பேசுகிறார்.

சென்னை,

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த மே 7-ந் தேதியன்று தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.

புதிய அரசு இயங்கத் தொடங்கியதில் இருந்தே, கொரோனா தொற்றின் எண்ணிக்கையை குறைப்பதிலும், அதனால் நடக்கும் மக்கள் இறப்பை தடுப்பதிலும் கடுமையாக போராடியது.

மற்ற செயல்பாடுகள்

இதற்கிடையே தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, கருப்பு பூஞ்சை தொற்று என புதிய புதிய தலைவலிகள் வரத் தொடங்கின. இதை மேலாண்மை செய்ய அரசு கடுமையாகப் போராடியது.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த பிறகே அரசுக்கு ஓரளவு வெற்றி கிடைக்கத் தொடங்கியது. எனவே வாரம் வாரம் ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தி, அதை அமல்படுத்துவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் ஒருநாள் தொற்றின் எண்ணிக்கை 36 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்து வந்துள்ளது. சற்று ஆசுவாசம் கிடைத்துள்ள இந்த நேரத்தில் மற்ற சில நடவடிக்கைகளில் இறங்க அரசுக்கு அவகாசம் கிடைத்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமருடன் சந்திப்பு

அதன்படி, முதல்-அமைச்சரான பிறகு, முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரடியாக சந்தித்து பேசுவதற்கு மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே அதற்கான அனுமதியை பெற தமிழக அரசு முயற்சிகளை எடுத்துள்ளது.

இந்த சந்திப்பின் போது தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிப்பார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

16-ந் தேதி புறப்படுகிறார்

அரசு ரீதியான சந்திப்புகள் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியான சந்திப்புகளும் நடைபெறுவதாக தெரிய வருகிறது. அந்த வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முக்கிய நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சந்திப்புகளுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந் தேதியன்று சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். 17-ந் தேதியன்று தலைவர்கள் அனைவரையும் சந்தித்து பேசுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story