உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் 1,100 மனுக்களுக்கு உடனடி தீர்வு


உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் 1,100 மனுக்களுக்கு உடனடி தீர்வு
x
தினத்தந்தி 11 Jun 2021 11:54 PM GMT (Updated: 11 Jun 2021 11:54 PM GMT)

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சேலம் மாவட்டத்தில் 1,100 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, அதில் 10 மனுதாரர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சேலம்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது அந்தந்த தொகுதி மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆட்சி பொறுப்புக்கு வந்ததும், ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற தனித்துறையை உருவாக்கினார். அந்த துறை உருவாக்கப்பட்டதில் இருந்து மு.க.ஸ்டாலின் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் 1,100 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1,100 மனுக்களுக்கு தீர்வு

முதல்-அமைச்சர் கடந்த 18-ந் தேதி தலைமை செயலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 549 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, முதல்-அமைச்சர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின்கீழ் 846 மனுக்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் 145 மனுக்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகநலத்துறையின் கீழ் 9 மனுக்களுக்கும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக சேவைப்பிரிவில் 100 மனுக்களுக்கும் என மொத்தம் 1,100 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அதன் அடையாளமாக 10 நபர்களுக்கு ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்-அமைச்சர் வழங்கினார்

அதன்படி, எடப்பாடி, வெள்ளாண்டிவலசைச் சேர்ந்த மா.நாகராஜூக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரையும், சங்ககிரி கத்தேரியை சேர்ந்த ர.சுமதிக்கு பசுமை வீடு கட்டுவதற்கான ஆணையையும், எடப்பாடி, கச்சுப்பள்ளியைச் சேர்ந்த செ.நல்லமுத்துவுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும், சங்ககிரி, வைகுந்தத்தைச் சேர்ந்த ர.சித்ராவுக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும், எடப்பாடி, வெள்ளாண்டிவலசை சேர்ந்த ர.தேவிக்கு தையல் எந்திரத்தையும், மேட்டூர், ஓலைப்பட்டியைச் சேர்ந்த ம.அரிக்கொடிக்கு திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கத்தையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.

சேலம் மாவட்டத்தில் சாலைமேம்பாடு, குடிநீர் வசதி, சுகாதார வளாகம் போன்ற அடிப்படை வசதி வேண்டி வரப்பெற்ற பொது கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் முதல்-அமைச்சர், வீரபாண்டியை சேர்ந்த கே.கணேசன் கோரிக்கையின் அடிப்படையில் ரூ.70 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் ராக்கிப்பட்டி ஊராட்சியில் சமுதாயநலக்கூடம் கட்டுவதற்கு அனுமதி ஆணையையும், ஆத்தூரை சேர்ந்த பொன்னுசாமியின் கோரிக்கையின் அடிப்படையில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் வளையமாதேவி ஊராட்சி பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தும் பணிக்கான அனுமதி ஆணையையும், எடப்பாடியை சேர்ந்த ஜெயந்தி கைலாசம் கோரிக்கையின் அடிப்படையில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கான அனுமதி ஆணையையும், எடப்பாடி கொங்கணாபுரத்தை சேர்ந்த புகழேந்தி கோரிக்கையின் அடிப்படையில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் எருமைப்பட்டி ஊராட்சியில் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் பணிக்கான அனுமதி ஆணையையும் வழங்கினார்.

அறிவுரை

இதேபோல், இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வுசெய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என இத்துறை அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, மதிவேந்தன், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், டாக்டர் பொன்.கவுதம் சிகாமணி, டாக்டர் செந்தில்குமார், ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் இரா.ராஜேந்திரன், இரா.அருள், எஸ்.சதாசிவம், “உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்’’ துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story