அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலம் விட வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்


அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலம் விட வேண்டும் மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்
x
தினத்தந்தி 12 Jun 2021 12:02 AM GMT (Updated: 12 Jun 2021 12:02 AM GMT)

தமிழக அரசு அலுவலக வளாகங்களில் கிடக்கும் துருப்பிடித்த வாகனங்களை உடனடியாக ஏலத்தில் விற்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்கள், துறைத் தலைவர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபற்றி விசாரித்தால், அவை அங்கு ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன? என்பது பற்றி யாராலும் கூற முடியவில்லை.

எனவே இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்தவும், அதற்கான வழிகாணவும் நீங்கள் முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும்.

வெயிலிலும், மழையிலும்..

அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும்.

அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வரமாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகிவிடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story