மாநில செய்திகள்

தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு டாஸ்மாக், சலூன் கடைகள் திறக்க அனுமதி + "||" + The curfew with relaxations allowed a further one-week extension to open Tasmac, saloon stores

தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு டாஸ்மாக், சலூன் கடைகள் திறக்க அனுமதி

தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு டாஸ்மாக், சலூன் கடைகள் திறக்க அனுமதி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. டாஸ்மாக், மின்சாதனம், சலூன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காததால், ஊரடங்கு 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையிலும், பின்னர் 31-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.


5-வது முறையாக நீட்டிப்பு

கடைசியாக அறிவித்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்தது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 6 மணி வரையிலும் நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில் தமிழகத்தில் ஊரடங்கினை 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 21-ந் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டித்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க...

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு 30-6-2021 வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு வரும் 14-ந் தேதியன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த்தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 14-ந் தேதி முதல் 21-ந் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

இந்த ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

11 மாவட்டங்கள்

ஊரடங்கின்போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இதனை கருத்தில் கொண்டும், அதேசமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், இந்த 11 மாவட்டங்களில் கூடுதலாக அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் 14-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

அதன் விவரம் வருமாறு:-

பழுது நீக்கும் கடைகள்

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

* எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் எந்திரங்கள் பழுதுநீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்கு சென்று பழுதுநீக்கம் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன்அனுமதிக்கப்படுவார்கள். ஆனாலும் இந்த வகை கடைகள் திறக்க அனுமதியில்லை.

* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டாக்சிகளில், ஓட்டுனர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுனர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

* வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மண்பாண்டம் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

சலூன்கள் திறக்க அனுமதி

11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

அதன் விவரம் வருமாறு:-

* அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

* வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மண்பாண்டம் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்பொருட்களின் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி

* டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கட்டுமானப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* மிக்சி, கிரைண்டர், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாகப்பணிகள் அனுமதிக்கப்படும்.

33 சதவீத பணியாளர்களுடன்...

* ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* தற்போது இதர தொழிற்சாலைகளும் 33 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

* தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் நான்கு சக்கர வாகனங்களில் பணிக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களிலும் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவர்.

* தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவீதம் பணியாளர்கள் அல்லது 10 நபர்கள் மட்டும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

* வீட்டு வசதி நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

கொரோனாவை முற்றிலும் அகற்ற உதவ வேண்டும்

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த, தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவில்கள்

கோவில்கள், வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை அனுமதிப்பதற்கான தடை தொடருகிறது. அதுபோல பொதுபோக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் டீ கடைகள் திறப்பு தொடர்பாகவும் அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஓட்டல்களில் பார்சல் சேவை தொடருகிறது.

மதுபானங்கள் விலை உயர்கிறது

டாஸ்மாக் கடைகள் 14-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, ஒரு குவாட்டருக்கு ரூ.10 முதல் ரூ.30 வரையிலும் உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்த நேரத்தில், மதுபானங்களின் விலை உயர்த்தப்படும் என்ற அதிர்ச்சியான செய்தியும் மதுப்பிரியர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் 19-ந் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவடையும் நிலையில் அதை கூடுதல் தளர்வுகளுடன் மீண்டும் நீட்டிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
3. ஒடிசா மாநிலத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
ஒடிசா மாநிலத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
4. தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு - முழு விவரம்
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.19ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
5. அசாமில் 7 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிப்பு
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 2,640- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.