தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை இன்று மாலைக்குள் 1 கோடியை எட்டிவிடும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Jun 2021 6:48 AM GMT (Updated: 12 Jun 2021 6:48 AM GMT)

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை இன்று மாலைக்குள் 1 கோடியை எட்டிவிடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை இன்று மாலைக்குள் 1 கோடியை எட்டிவிடும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 1.06 கோடி கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 98 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 21,63,200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் உள்ள 5,000 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொண்ட இடமாக கோயம்பேடு சந்தை மாற உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரை 9.655 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இதுவரை 2,500 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மாலைக்குள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டிவிடும்” என்று கூறினார். 

மேலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “கொரோனா தொற்று அதிகரித்தபோது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக மது கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டன. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மதுக்கடைகளை திறக்க வருவாய் துறை தற்போது முடிவு செய்துள்ளது. கொரோனா முதல் அலையின் போது மதுக்கடைகளை திறந்து வைத்தவர்கள் இதனை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். 

Next Story