டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி ஏன்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி ஏன்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
x
தினத்தந்தி 12 Jun 2021 8:38 AM GMT (Updated: 12 Jun 2021 9:31 AM GMT)

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு இன்று தண்ணீரை திறந்து வைத்தார். 

பின்னர் அணையின் வலது கரையில் அமைக்கப்பட்ட மேடையில் இருந்து, மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரில் மலர்களை தூவி வரவேற்றார். தண்ணீர் திறப்பு நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அணையை திறந்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், “தொடர்ந்து  இரண்டாவது ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தண்ணீர் திறப்பின் மூலம் 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். ஜூன் 12ஆம் தேதி குறிப்பிட்ட நாளில் அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

திருச்சி மாநாட்டில் அறிவித்தது போல வேளாண் துறைக்கு திமுக அரசு முக்கியத்துவம் அளிக்கும். நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உணவுத்துறையில் தமிழகம் சாதனை படைக்கும். பயிர் சாகுபடி பரப்பளவை 75% அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழகத்தில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் வேண்டும் என மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். டெல்லியில் வரும் 17ஆம்தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்.  

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதி வரைக்கும் சென்று சேர வேண்டும். அதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது. தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ. 65 கோடி மதிப்பீட்டில் 4061 கிமீ தூரத்திற்கு தூர்வாரம் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு. மேட்டூர் அணையை ஆண்டுதோறும் ஜூன் 12ந்தேதி திறந்து வைப்பதில் அரசு உறுதியாக உள்ளது” என்று அவர் கூறினார். 

மேலும் கொரோனா தொற்று குறைந்து வருவதால்தான் தளர்வுகளின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.  

Next Story