தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: டீக்கடைகளை இன்று முதல் திறக்க அனுமதி - இ-சேவை மையங்களும் செயல்பட உத்தரவு


தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு: டீக்கடைகளை இன்று முதல் திறக்க அனுமதி - இ-சேவை மையங்களும் செயல்பட உத்தரவு
x
தினத்தந்தி 13 Jun 2021 7:02 PM GMT (Updated: 14 Jun 2021 12:46 AM GMT)

27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. டீக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இ-சேவை மையங்களும் செயல்பட உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

கொரோனா பரவலை முற்றிலுமாக தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது வருகிற 21-ந்தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேலும் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், அழகுநிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும். அதேபோல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைகான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மின்பொருட்கள் (எலக்ட்ரிக்கல்ஸ்), ஹார்டுவேர்ஸ், நோட்டு புத்தகம், விற்பனை, ஆட்டோமோபைல் உதிரி பாகங்கள் விற்பனை, 2 சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதேபோல் வீட்டு உபயோக பொருட்களான டி.வி., மிக்சி, கிரைண்டர் மற்றும் பிரிட்ஜ் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படலாம்.

வழிகாட்டும் நடைமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தொழிலாளர்கள் 4 சக்கர வாகனங்களுக்கு பதிலாக, தங்களுடைய 2 சக்கர வாகனங்களில் இ-பதிவு மற்றும் தொழிற்சாலை வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் பணிக்கு சென்றுவர அனுமதிக்கப்படுவர்.

தகவல்தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் 20 சதவீத பணியாளர்களுடனும், வீட்டு வசதி நிறுவனம் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இந்தநிலையில், டீக்கடைகள், இனிப்பு - கார தின்பண்ட கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வந்தன. அந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று முதல் அந்த கடைகளையும் திறக்க அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த கடந்த 31-5-2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது.

இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட 7 மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல், டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

பார்சல் முறையில் டீ வாங்க வரும் பொதுமக்கள் பாத்திரங்களை கொண்டுவந்து பெற்றுச்செல்லுமாறும், பிளாஸ்டிக் பைகளில் டீ பெறுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடைகளின் அருகே நின்று டீ அருந்த அனுமதி இல்லை.

மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு - கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித்தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story