கொரோனா பரவல் கட்டுக்குள் வர மக்களின் ஒத்துழைப்புதான் காரணம்: மு.க.ஸ்டாலின்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Jun 2021 3:42 AM GMT (Updated: 14 Jun 2021 11:21 AM GMT)

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா பரவலை முற்றிலுமாக தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது வருகிற 21-ந்தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

இதனிடையே தமிழகத்தில் நேற்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 267 பேர் உயிரிழந்த நிலையில் 25,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தொற்று குறைய உதவிய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் இரண்டு வார காலத்தில் அனைத்தும் கட்டுக்குள் வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றியதால் குறைந்துள்ளது. 

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. டாஸ்மாக் கடைகள் முழுமையாக கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும். டாஸ்மாக் கடைகளில் கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் தங்களுக்கும் நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். 

காவல்துறை கண்காணிப்பு இல்லாமலேயே மக்கள் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். முழு ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் நடந்துக் கொள்ள வேண்டும். பொதுபோக்குவரத்து விரைவில் இயக்கப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். தொற்று பரவலை தகர்க்கும் வல்லமை மக்களுக்கு உள்ளது. 

அரசின் விதிகளை பின்பற்றி நடந்து கொண்ட மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி . 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்த நிலையில் 15 ஆயிரத்துக்கும் கீழ் தொற்று பதிவாகி உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை படுக்கை வசதி இல்லை போன்ற நிலைமை தற்போது இல்லை. கொரோனா கட்டளை மையத்தை தொடர்பு கொள்வோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” என்று அவர் கூறினார். 




Next Story