5 வாரங்களுக்கு பிறகு 27 மாவட்டத்தில் மதுக்கடைகள் திறப்பு போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை


5 வாரங்களுக்கு பிறகு 27 மாவட்டத்தில் மதுக்கடைகள் திறப்பு போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை
x
தினத்தந்தி 14 Jun 2021 3:10 PM GMT (Updated: 14 Jun 2021 3:10 PM GMT)

தமிழகத்தில் 5 வாரங்களுக்கு பிறகு 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடந்தது.

சென்னை,

தமிழகத்தில் 5 வாரங்களுக்கு பிறகு 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடந்தது.

சட்டவிரோதமாக விற்பனை

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மதுக்கடைகள் கடந்த மாதம் 10-ந்தேதி மூடப்பட்டது. இதனால் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக மது பிரியர்கள் மது கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மது பாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக பலர் விற்பனை செய்தனர்.

இந்நிலையில் ஊரடங்கில் நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்தன. அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்துள்ள சென்னை உள்பட 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது.

மதுபிரியர்கள் குவிந்தனர்

இதையடுத்து மதுக்கடைகளில் மது பிரியர்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் பலர் கூடுவதை தவிர்ப்பதற்காக மது விற்பனைக்கு சிறப்பு ஏற்பாடுகளும், மதுக்கடைகள் முன்பு தடுப்பு கட்டைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அதன் வழியாக மட்டுமே சமூக இடைவெளியை கடைபிடித்து குடிமகன்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

முக வசம் அணியாமல் வருபவர்களுக்கு மது கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நேற்று காலையில் மது வாங்க முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட்டது. ஒரு சிலர் துணியால் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொண்டு மது வாங்க வந்திருந்தனர். அவர்களை போலீசார் முககவசம் அணிந்து வருமாறு கூறி திருப்பி அனுப்பினார்கள்.

18 கட்டுப்பாடுகள்

மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த 18 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவைகளை முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மதுக்கடைகள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். வரிசையில் அருகருகே நின்றிருந்தவர்களை விலக்கிவிட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுரை வழங்கினார்கள்.

மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நிற்பதற்கு வசதியாக மதுக்கடைகள் முன்பு 6 அடி இடைவெளியில் வட்டங்களும் போடப்பட்டு இருந்தன. இந்த வட்டங்களுக்குள் நின்று பொறுமையாக மது வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள் கடைகளின் அருகே வைத்து மது அருந்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

பார்கள் செயல்படாத நிலையில் மது பிரியர்கள் மது வாங்கிக்கொண்டு அதனை மறைவான இடத்தில் வைத்து குடிப்பதற்காக திண்டாடினார்கள். பலர் ஒதுக்குபுறமான பகுதிகளுக்கு சென்று மது அருந்தினர்.

வயதானவர்கள் சிலர் சாலை ஓரமாக நின்று மது அருந்தியதையும் காணமுடிந்தது. ஒரு மாதத்துக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் குடிமகன்கள் நேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

11 மாவட்டங்களில் திறக்கப்படவில்லை

இருப்பினும் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

இந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள மற்ற மாவட்டங்களில் மது பிரியர்கள் அதிகளவில் கூடுவதை கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.


Next Story