கொரோனா 3-வது அலை வரும் என உலக நாடுகள் அச்சம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கொரோனா 3-வது அலை வரும் என உலக நாடுகள் அச்சம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 14 Jun 2021 5:56 PM GMT (Updated: 14 Jun 2021 5:56 PM GMT)

பொதுமக்கள் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கொரோனா 3-வது அலை வரும் என்று உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொற்று குறைகிறது

சென்னை கிண்டி கிங் கொரோனா ஆஸ்பத்திரியில் ரூ.20 லட்சம் மதிப்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தனியார் நிறுவனம் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உதவியால் தற்போது அனைத்து ஆஸ்பத்திரிகளிலும், மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. கிண்டி கிங் கொரோனா ஆஸ்பத்திரி 650 ஆக்சிஜன் படுக்கைகளுடன் இயங்கி கொண்டிருக்கிறது. தற்போது 264 நோயாளிகள் மட்டுமே இங்கு சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்த ஆஸ்பத்திரியில் 19 ஆயிரத்து 404 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். நேற்று (நேற்று முன்தினம்) 54 ஆயிரத்து 171 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. தொற்றின் அளவு மிகவும் குறைந்துள்ளது. அதே போல் இறப்பு எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.

கொரோனா 3-வது அலை

சென்னையிலும் ஆயிரத்துக்கும் கீழ் தொற்று குறைந்துள்ளது. 27 மாவட்டங்களில் 500-க்கும் குறைவான பாதிப்பு இருக்கிறது. மேற்கு மாவட்டங்களை பொறுத்தவரை 2 மாவட்டங்களில் மட்டும் தான் ஆயிரத்துக்கும்மேல் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. உலக நாடுகள் கொரோனா 3-வது அலை வருமோ என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. ஒரு சில நாடுகளில் 3-வது அலை எட்டி பார்க்கவும் தொடங்கி உள்ளது. அதனால் பொதுமக்கள் தொடர்ந்து கை கழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1,493 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிப்பு

இதுவரை 1,493 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 77 பேர் குணமடைந்துள்ளனர். கருப்பு பூஞ்சை தொடர்பாக ஆரம்ப நிலையில் அறிகுறி தென்படுகிறபோதே ஆஸ்பத்திரியை நாடினால் நிச்சயம் பெரிய பாதிப்பில் இருந்து தப்பலாம். கருப்பு பூஞ்சைக்காக நியமிக்கப்பட்ட 13 பேர் கொண்ட குழு ஓரிரு நாளில் அதற்கான அறிக்கையை தயார் செய்ய இருக்கிறார்கள். தமிழகத்தில் 3 லட்சத்து 27 ஆயிரத்து 970 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் கூட பயமில்லாமல் இருக்கலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக ரத்த தான தினம்

இதையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் செய்து ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர், ‘தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னால் ரத்த தானம் செய்வதில் எந்தவித தடையும் இல்லை. அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 15 நாட்களுக்கு பிறகு ரத்த தானம் செய்யலாம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மணி, ரத்த வங்கி அலுவலர் டாக்டர் தமிழ்மணி உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story