குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு சம்பவம்: செவிலியர் மீது வழக்குப்பதிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 Jun 2021 6:41 AM GMT (Updated: 15 Jun 2021 6:41 AM GMT)

தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரியதர்ஷினி (20). இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டு ஆகிறது. கர்ப்பம் அடைந்த பிரியதர்ஷினி பிரசவத்திற்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 25-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

குறைபிரசவத்தில் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தைக்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகவும், இதனால் தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றும் சாதனம் வழியாக உணவு வழங்கப்பட்டு வந்தது. குழந்தையின் கை அசையாமல் இருக்கவும் டாக்டர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

தொடர் சிகிச்சையின் காரணமாக குழந்தை உடல்நலம் தேறி நல்ல நிலைக்கு வந்தது. குழந்தை ஆரோக்கியமாக இருந்ததால்‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு தாயையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. 

இதனால் குழந்தையின் கையில் இருந்த மருந்து ஏற்றும் சாதனத்தை அகற்ற செவிலியர் ஒருவர் முயற்சி செய்தார். அவர் கைகளால் அதை அகற்றாமல் கத்தரிக்கோலால் நறுக்கியபோது குழந்தையின் கை பெரு விரல் துண்டானது.

கவனக்குறைவால் தவறு நடந்து விட்டதை அறிந்த செவிலியர் உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் அங்கு விரைந்து வந்து குழந்தையின் துண்டான விரலை கையுடன் இணைத்து தையல் போட்டார். இந்த சம்பவம் செவிலியரின் அலட்சியம் காரணமாக நடைபெற்றதா? என்பது குறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.  

மேலும் இந்த விவகாரம் குறித்து 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story