இனியும் என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது: சசிகலா ஆவேச பேச்சு


இனியும் என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது: சசிகலா ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 15 Jun 2021 11:51 PM GMT (Updated: 15 Jun 2021 11:51 PM GMT)

‘‘என்னையே முதுகில் குத்திவிட்டார்கள். இனியும் என்னால் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது’’ என சசிகலா ஆவேசமாக பேசியுள்ளார்.

16 பேர் நீக்கம்
சசிகலா தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசும் வீடியோ அவ்வப்போது வெளியாகி அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.இந்த நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய முன்னாள் அமைச்சர் உள்பட 16 பேர் நேற்று முன்தினம் அ.தி.மு.க.வில் இருந்து திடீரென நீக்கப்பட்டனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

உங்ககூட பேசுனதுக்காக...
இந்த நிலையில் நேற்றும் சசிகலா பேசும் ஆடியோ பதிவுகள் வெளியாகின. தேனியை சேர்ந்த சிவனேசன் என்ற தொண்டரிடம் சசிகலா பேசிய விவரம் வருமாறு:-

தொண்டர்:- உங்க கூட பேசுனதுக்காக இன்னைக்கு நிர்வாகிகள் சிலரை கட்சியை விட்டு தூக்கிட்டாங்களேம்மா?

சசிகலா:- இதெல்லாம் ரொம்ப தப்பு. எதிர்க்கட்சியா இருக்கும் இந்த சூழ்நிலையில கூட கட்சியை எப்படி கொண்டு போனும்னு தெரியலைனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு.

2 பேரின் சுயநலம்
எல்லாரும் ஒன்று சேர்ந்து இருந்தா தானே கட்சியை நல்லபடியா கொண்டுசெல்ல முடியும். அது இல்லைனு தானே தொண்டர்கள் எல்லாரும் கவலைப்படுறாங்க. தொண்டர்கள் எல்லாருமே ரொம்ப நொந்து போயிருக்காங்க.தொண்டர்கள் என்கிட்ட அவங்களோட மனக்குமுறல கொட்டும்போது, என்னால் அதை பாத்துக்கிட்டு எப்படி சும்மா இருக்கமுடியும்? ஒருத்தர், 2 பேரின் சுயநலத்துக்காக தொண்டர்களை பலிகாடாவாக ஆக்கலாமா? தொண்டர்கள் இந்த கட்சிக்காக விசுவாசமா உழைச்சது தப்பா?
முதுகில் குத்திட்டாங்க... 

எல்லாரும் சொல்வது போல, இடமே இல்லாதவாறு என் முதுகில் குத்திட்டாங்க. என்னை மாதிரியே தொண்டர்களையும் முதுகில் குத்த ஆரம்பிச்சுட்டா, அதை எப்படி என்னால பாத்துக்கிட்டு இருக்கமுடியும்? இனியும் என்னால் வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்திருக்க முடியாது.

தொண்டர்:- நீங்க வெளியே வந்தபோதே, கட்சிக்கு வந்திருந்தா இன்னைக்கு ஆட்சி நம்ம கையில் இருந்துருக்கும்மா...

‘என்னை சேர்த்துக்க முடியாது, நாங்களே வந்து காட்டுவோம்’ அப்படினு சொன்னது நான் இல்ல. கட்சியை காப்பாத்த நான் உறுதியா வருவேன். வந்தே தீருவேன். அதுக்கான நேரம் இப்போ வந்தாச்சு... அதை நான் செஞ்சுதான் தீருவேன்.  கொரோனா தீவிரம் குறையட்டும். உங்க எல்லாரையும் வந்து சந்திக்கிறேன்.

இவ்வாறு அந்த உரையாடல் நிறைவடைகிறது.

இதேபோல மேலும் சிலரிடமும், சசிகலா பேசும் ஆடியோக்களும் வெளியாகி உள்ளன.

Next Story