தமிழகத்தில் விரைவில் கோவில்கள் திறக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு தகவல்


தமிழகத்தில்  விரைவில் கோவில்கள் திறக்கப்படும்  -  அமைச்சர் சேகர் பாபு தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2021 11:37 PM GMT (Updated: 16 Jun 2021 11:37 PM GMT)

கொரோனா அச்சம் விலகும் நிலையில் கோவில்கள் விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு விடப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

திருச்சி, 

திருச்சி மலைக்கோட்டை உள்ளிட்ட 5 கோவில்களில் ‘ரோப்கார்' வசதிக்கு நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திருச்சி வருகை தந்தார். பின்னர் அவர், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு கோவில் குருக்கள் ராமநாதன், பிரபு ஆகியோர் தலைமையில் மரியாதை அளிக்கப்பட்டது.

பின்னர் அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகரை தரிசனம் செய்த அவர் பின்னர், தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து மலைக்கோட்டைக்கு சென்று மூலவர் உச்சிப்பிள்ளையாரை வழிபட்டார்.

இந்த ஆய்வின்போது மலைக்கோட்டை கோவிலை மேம்படுத்துவது தொடர்பாகவும், ‘ரோப்கார்' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

ஆய்வுக்கு பின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சோழிங்கநல்லூர் நரசிம்மர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருநீர்மலை கோவில், மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், திருத்தணி முருகன் கோவில் ஆகிய 5 கோவில்களில் ‘ரோப் கார்' அமைப்பதற்கு முதல்-அமைச்சர் ஆய்வு பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மலைக்கோட்டையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரோப்கார் வசதி ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.

மீதி உள்ள கோவில்களிலும் ஆய்வு முடித்த பின்னர் இதன் அறிக்கைகள் முதல்-அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படும். இத்திட்டங்கள் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டவை. இடையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

ஆன்மிகம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்து மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்ய துடிக்கின்ற சக்திகளுக்கு எங்களது செயல்பாடு சந்தேகத்தைத்தான் ஏற்படுத்தும். அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களும் வாய்ஜாலம் அல்ல. செயல்படுத்தக்கூடிய திட்டங்களே!.

தமிழகத்தில் சைவம், வைணவம் என 6 ஆகம பள்ளிகள் இருக்கிறது. அதை புனரமைத்து மீண்டும் செயல்படுத்த தயாராக இருக்கிறோம். இந்த பள்ளிகளில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வருவதை பொறுத்து ஆகம பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

இந்து கோவில்கள் தொடர்பான குறைகளை பதிவிட தனி செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 1,600 மனுக்கள் வந்துள்ளன. அதற்கென்று தனியாக ஒரு குழு அமைத்து வாரந்தோறும் ஆணையர் தலைமையில் பரிசீலனை செய்து ஏற்கப்படும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்து குறைகள் தீர்க்கப்படும்.

தமிழகத்தில் இன்னும் ஒருவாரத்திற்குள் கொரோனா நோய்த்தொற்று விரட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, கொரோனா அச்சம் விலகும் நிலையில் கோவில்கள் விரைவில் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு விடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story