40 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை


40 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Jun 2021 5:58 AM GMT (Updated: 18 Jun 2021 6:09 AM GMT)

தமிழ்நாட்டில் ஜூன் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் என்னென்ன தளர்வுகள் வழங்குவது என்பது குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை கடந்த மாதம் முதல் வாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொற்று பாதிப்பு மட்டுமின்றி உயிர் இழப்பும் அதிகரித்தது.

இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து மற்றும் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பஸ் போக்குவரத்தையும் கட்டுப்பாடுகளுடன் தொடங்குவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா அதிகம் பாதித்துள்ள மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் நகர பஸ்களை மட்டும் முதலில் இயக்க அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் இருந்து மாவட்டத்திற்கு பஸ் சேவை தொடங்கப்படுவது சற்று தள்ளி வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது.

வருகிற 21-ந் தேதி (திங்கட்சிழமை) முதல் அனைத்து நகரங்களிலும் நகர பஸ்களை மட்டும் இயக்க அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னையில் மாநகர பஸ்களை இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி குறைந்த அளவில் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் 50 சதவீத பஸ்களை இயக்கவும், அதில் 50 சதவீத இருக்கைகளில் பயணிகளை அனுமதிக்கவும் மாநகர போக்குவரத்து கழகம் தயாராகி உள்ளது.

மொத்தமுள்ள 3200 பஸ்களில் 250 பஸ்கள் தற்போது கொரோனா முன்களப்பணியாளர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. இது போக மேலும் 1000 பஸ்களை பல்வேறு வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறு கடைகள், தொழில் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கார், ஆட்டோ, வேன்களில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு பஸ்களை இயக்கினால் மட்டுமே ஏழை, எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும். கூலித் தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதனால் முதல்கட்டமாக 40 நாட்களுக்கு பிறகு மாநகர பஸ்களை மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் தயார் நிலையில் உள்ளது.

Next Story