அடுத்த ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகள்...! மு.க.ஸ்டாலின், மருத்துவ குழுவுடன் இன்று ஆலோசனை


அடுத்த ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகள்...! மு.க.ஸ்டாலின், மருத்துவ குழுவுடன் இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 19 Jun 2021 12:46 AM GMT (Updated: 19 Jun 2021 4:29 AM GMT)

தமிழகத்தில் அடுத்ததாக பிறப்பிக்கப்படும் ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகளை அளிக்கலாம் என்பது பற்றி மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த மே 7-ந்தேதி புதிய அரசு பதவி ஏற்றபோது கொரோனா தொற்று பரவல் ஏறுமுகமாக இருந்தது. ஒருகட்டத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொட்டது.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மே 24-ந்தேதியில் இருந்து 31-ந்தேதிவரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.

இந்த காலகட்டத்தில் தொற்று சற்று குறைந்து முன்னேற்றம் காணப்பட்டது. எனவே தொற்றின் சங்கிலித்தொடரை அறுப்பதற்காக மீண்டும் ஒரு வாரம், அதாவது மே 31-ந்தேதியில் இருந்து ஜூன் 7-ந்தேதிவரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டது.

இந்த 2 முழு ஊரடங்கில் நல்ல பலன் கிடைத்ததைத் தொடர்ந்து 3-ம் முறையாக சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவு 7-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்தது.

ஆனால் கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் தொற்று எண்ணிக்கை கூடுதலாக இருந்தது.

எனவே அந்த 11 மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களிலும் பல்வேறு தளர்வுகளுடன் 14-ந்தேதியில் இருந்து 21-ந்தேதிவரை 4-வது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21-ந்தேதியுடன் 4-வது ஊரடங்கு முடிவடைகிறது. கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை தற்போது 8 ஆயிரத்து 633 என்ற அளவில் குறைந்துள்ளது. 11 மாவட்டங்களில் கோவை, ஈரோடு தவிர மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இந்த நிலையில் 5-வது முறையாக ஊரடங்கு உத்தரவை 28-ந்தேதிவரை நீட்டிப்பது தொடர்பாகவும், எந்தெந்த மாவட்டங்களுக்கு கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது தொடர்பாகவும் இன்று தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.

தற்போதுள்ள தொற்றின் நிலை, மேலும் தளர்வுகளை அளிப்பது, கடைகள் இயங்க கூடுதல் நேரம் அளிப்பது, திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் உறவினர்கள் பங்கேற்பதில் உள்ள எண்ணிக்கை கட்டுப்பாட்டை தளர்த்துவது, பொது போக்குவரத்தை அனுமதிப்பது, பெரிய கடைகளை ஏ.சி. இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் இயங்க அனுமதிப்பது, நூலகம், அருங்காட்சியகத்தை திறப்பது, அரசு அலுவலகங்களில் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது போன்றவை பற்றி ஆலோசிக்கப்படும்.

மேலும், 11 மாவட்டங்களில் தொற்று குறைந்துவரும் மாவட்டங்களை தேர்வுசெய்து அங்கு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவின் அடிப்படையில், தமிழகத்தில் அடுத்தகட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

Next Story