என்னதான் தீர்மானம் போட்டாலும் தொண்டர்களை என்னிடத்தில் இருந்து யாரும் பிரிக்க முடியாது சசிகலா பேச்சு


என்னதான் தீர்மானம் போட்டாலும் தொண்டர்களை என்னிடத்தில் இருந்து யாரும் பிரிக்க முடியாது சசிகலா பேச்சு
x
தினத்தந்தி 19 Jun 2021 1:26 AM GMT (Updated: 19 Jun 2021 1:26 AM GMT)

என்னதான் தீர்மானம் போட்டாலும், தொண்டர்களை என்னிடத்தில் இருந்து யாரும் பிரிக்க முடியாது என்று சசிகலா பேசி இருக்கிறார்.

சென்னை,

சசிகலா தினமும் தொண்டர்களுடன் செல்போனில் பேசி வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்டத்தில் நடந்தஅ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தில், ‘அ.தி.மு.க.வுக்கும், சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்ற தீர்மானத்தை அவருக்கு எதிராக நிறைவேற்றினர்.

இதேபோல், விழுப்புரம் மாவட்டம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘சசிகலாவின் கனவு நனவாகாது, தொலைபேசியில் பேசி நாடகம் ஆடுகிறார்' என்று காட்டமாக பேசினார். மேலும், சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த சூழ்நிலையில், சசிகலா நேற்றும் தொண்டர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். திருவண்ணாமலையை சேர்ந்த அர்ஜூனன் என்ற தொண்டரிடம் பேசிய உரையாடல் விவரம் வருமாறு:-

சசிகலா:- அர்ஜூனன்....

தொண்டர்:- அம்மா நல்லா இருக்கீங்களா? நீங்கள் பேசினது ரொம்ப சந்தோஷமா இருக்குது.

சசிகலா:- நீங்கள் லெட்டர் போட்டு இருந்தீர்கள். அதனால்தான் போன் போட்டு பேசிக்கிட்டு இருக்கேன்.

தொண்டர்:- நீங்கள் கண்டிப்பாக வரணும். என்னென்னமோ பேசுகிறார்கள். உங்களுக்கு பக்க பலமாக நாங்கள் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தீர்மானம் போடுகிறார். நாங்களும் தனியாக தீர்மானம் போட இருக்கிறோம்.

சசிகலா:- அவர்கள் என்னதான் தீர்மானம் போட்டாலும், ஒரு தாய் கிட்ட இருந்து பிள்ளைகளை எப்படி பிரிக்க முடியாதோ?, அதேபோல், தொண்டர்களையும் என்னிடத்தில் இருந்து யாரும் பிரிக்க முடியாது. கிராமத்தில் சொல்வார்கள். பிள்ளைப்புடிக்கிற கும்பல் மாதிரி இவர்கள் செய்கிறார்கள். என்னதான் மிட்டாய் கொடுத்து பிள்ளைகளை தூக்கிட்டு போனால்கூட, அவர்களிடம் இருந்து தப்பித்து தாய்க்கிட்டதான பிள்ளை போகும்.

ஊரடங்கு முடிந்ததும், உங்கள் எல்லோரையும் வந்து சந்திக்கிறேன். இவ்வாறு அந்த உரையாடல் இருந்தது.

இதேபோல், திருப்பூரை சேர்ந்த கலாராணி, மதுரையை சேர்ந்த பொன்மொழி ஆகிய பெண்களிடமும் அவர் பேசினார்.

Next Story