அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழர் பொறுப்பேற்பு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழர் பொறுப்பேற்பு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 19 Jun 2021 1:47 AM GMT (Updated: 19 Jun 2021 1:47 AM GMT)

அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையான இல்லினாய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக தமிழர் ராஜகோபால் பொறுப்பேற்க இருப்பதற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

அமெரிக்காவில் 131 ஆண்டுகள் பழமையானது, இல்லினாய் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தின் தலைவராக தமிழகத்தின் திருவாரூரில் பிறந்த ராஜகோபால் ஈச்சம்பாடி வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி பொறுப்பேற்க இருக்கிறார். இந்த பல்கலைக்கழகத்தின் 10-வது தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார். இந்த பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ராஜகோபால் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

இல்லினாய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழரான ராஜகோபாலுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையானதும், உலகப்புகழ் பெற்றதுமான இந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் என்பதால் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மட்டுமின்றி இந்திய துணைக்கண்டத்துக்கே உலகளாவிய பெருமையை அவர் பெற்றுத் தந்திருக்கிறார்.

53 வயதாகும் ராஜகோபால், திருவாரூரில் பிறந்து, சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பையும், அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரியில் தமது மேல்படிப்பையும் பயின்றவர். தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்துக்குச் சான்றாக விளங்கும் ராஜகோபாலுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். தேமதுர தமிழர் புகழ் திக்கெட்டும் பரவட்டும்.

Next Story