மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது சட்டசபை கூடும் நிலையில் ஆலோசனை


மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது சட்டசபை கூடும் நிலையில் ஆலோசனை
x
தினத்தந்தி 19 Jun 2021 1:52 AM GMT (Updated: 19 Jun 2021 1:52 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. சட்டசபை கூடும் நிலையில் ஆலோசிக்கப்படுகிறது.

சென்னை, 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரும், புதிய அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக் கொண்டனர்.

இந்தநிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 16-வது சட்டசபையின் முதல் கூட்டம் வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்க இருக்கிறது. புதிய அரசின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்த இருக்கிறார்.

அன்று மாலை 5 மணிக்கு தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கட்கிழமை (21-ந் தேதி) மாலை 5 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அதில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டசபையில் கவர்னர் உரை நிகழ்த்தியபிறகு, அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெறும் என தெரிகிறது. எனவே, இந்தக் கூட்டத் தொடரில், தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், யார் யார் உரையாற்ற வேண்டும் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

Next Story